No products in the cart.
நவம்பர் 03 – கர்த்தர் உங்களோடே!
“கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது” (2 நாளா. 17:3,5).
இன்றைக்கு அநேகர் ஐசுவரியத்தையும், கனத்தையும், செல்வத்தையும் நோக்கி ஓடுகிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் வேகமாக ஓடி அவற்றை அடைய முயற்சித்தாலும், அவையோ இவர்களுக்கு எட்டாத தூரத்துக்கு நகர்ந்துவிடுகின்றன. யோசபாத் ஆசீர்வாதத்தைத் தேடி ஓடவில்லை. ஆனாலும் ஐசுவரியமும் கனமும் அவரைத் தேடிவந்தது. இதன் இரகசியம் என்ன? கர்த்தர் யோசபாத்தோடு இருந்ததே காரணம் என்று வேதம் பதிலளிக்கிறது.
நீங்கள் ஆசீர்வதிக்கப்படவேண்டுமென்றால் கர்த்தர் உங்களோடு இருக்கவேண்டும். கர்த்தர் உங்களோடுகூட இருக்கும்போது கனமும் மகிமையும் ஐசுவரியமும் உங்களைத் தேடிவரும். தேவனுடைய தீர்க்கதரிசியாகிய அசரியா சொன்னார், “சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்” (2 நாளா. 15:2).
ஓவ்வொருநாளும் நீங்கள் கர்த்தரோடு இணைந்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதிகாலமே எழுந்து முழங்கால்படியிட்டு கர்த்தருடைய வார்த்தையை தியானித்து அவரைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். வாழ்நாளெல்லாம் அவரைத் துக்கப்படுத்தாதபடிக்கு, அவர் உங்களைவிட்டு விலகிவிடாதபடி சிறந்த பொக்கிஷத்தைப் பாதுகாப்பதுபோல அவரை உங்களுக்குள் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள்.
ஒரு மனுஷனுடைய மேன்மை அவனுடைய செல்வத்திலோ, செல்வாக்கிலோ, படிப்பிலோ, ஞானத்திலோ இல்லாமல் கர்த்தர் அவனோடுகூட இருப்பதில்தான் இருக்கிறது. கர்த்தர் தாவீதோடுகூட இருந்தார். அவர் விருத்தியடைந்துகொண்டேயிருந்தார். கர்த்தர் நோவாவோடுகூட இருந்தார். ஜலப்பிரளயத்திலிருந்து நோவா பாதுகாக்கப்பட்டார். கர்த்தர் ஏனோக்கோடுகூட இருந்தார். ஏனோக்கு மரணத்தைக் காணாதபடி எடுத்துக்கொள்ளப்பட்டார்.
அப். பவுல் மார்தட்டி முழங்குகிறார்: “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோம. 8:31). ஆம், கர்த்தர் நம்மோடுகூட இருக்கும்போது எந்த விரோதிகளும் நம்மை எதிர்த்து நிற்கமுடியாது. எந்தப் பொல்லாத மனுஷனும் நமக்கு விரோதமாய் சீறமுடியாது. உன்னைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான் என்றல்லவா அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார்!
கர்த்தர் யோசபாத்தோடு இருந்தார். எத்தனை பெரிய சாட்சி இது! உலகம் உங்களைப் பார்க்கும்போது உங்களோடுகூட கர்த்தர் இருக்கிறதைக் காணட்டும். கர்த்தருடைய பிரசன்னமும் சமுகமும்தான் உங்களை வழிநடத்துகிறது என்பதைக் காணட்டும். ஆவியின் வரங்களும் வல்லமைகளும் உங்களோடிருக்கிறதைக் காணட்டும்.
அன்று உயிர்த்தெழுந்த இயேசு சீஷர்களோடு இருந்ததை உலகம் கண்டது. சீஷர்கள் புறப்பட்டுப் போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார் (மாற். 16:20).
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களோடுகூட இருப்பதை உணருகிறீர்களா?
நினைவிற்கு:- “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” (சங். 118:6).