No products in the cart.
நவம்பர் 04 – எனக்காக யார் உண்டு!
“தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?” (யோபு 17:3).
எனக்கு யாருமில்லை என்றும், என் பிரச்சனைகள் யாருக்கும் தெரியவில்லையே என்றும், என் போராட்ட நேரத்தில் கைகொடுக்க ஒருவரும் இல்லையே என்றும் அநேகம்பேர் கலங்குவதைப் பார்க்கிறோம்.
யோபு பக்தனும்கூட, ‘வேறே எனக்கு யார் கைகொடுக்கக்கூடியவர்கள்’ என்று சொல்லி புலம்பியழுதுவிட்டு கர்த்தரை நோக்கி, “தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு எனக்காக பிணைப்படுவீராக” என்று ஜெபித்தார்.
இதுபோலவே என்னுடைய தகப்பனாரின் வாழ்க்கையிலும் ஒரு பிரச்சனை வந்தது. அவர் ஒரு அரசாங்கப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கும்பொழுது, வருமானவரி இலாகாவில் வேலை வாய்ப்புக்கென ஒரு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. என் தகப்பனார் இந்த தேர்வினை நன்றாக எழுதியிருந்தார். வேலை கிடைக்க வாய்ப்பு இருந்தது.
ஆனால் எழுத்துத்தேர்வினைத் தொடர்ந்து நேர்முகத் தேர்விற்காக அவருக்கு அனுப்பப்பட்ட அழைப்போ, காலம்கடந்து முடிவான தேதிக்குப்பிறகுதான் அவர் கைகளில் கிடைத்தது. அவர் இருதயம் உடைந்துபோனது. இந்த நேரத்தில் யார் எனக்கு கை கொடுப்பார்கள், யார் எனக்கு உதவி செய்வார்கள் என்று கர்த்தரை நோக்கி முறையிட்டார்.
அவர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, திடீரென்று கர்த்தர் அவருக்கு அதே அலுவலகத்திலே பணியாற்றுகிற ஒரு கிறிஸ்தவ சகோதரியை ஞாபகப்படுத்தினார். உடனடியாக அவர்களுடைய வீட்டை நோக்கி ஓடி நடந்த காரியத்தை அவர்களிடம் விளக்கினார். அவர்கள் என் தகப்பனாரிடம், “பயப்படாதேயுங்கள். நேர்முகத் தேர்வை நடத்துகிறவர் என்னுடைய அதிகாரிதான். நான் அவரிடம் பேசுகிறேன். நிச்சயமாகவே இன்னொரு நாளை உங்களுக்குக் குறித்துத் தருவார்” என்று சொன்னார்கள். அப்படியே செய்தார்கள். என் தகப்பனாருக்கு அரசாங்கத்தில் உடனடியாக வேலை கிடைத்தது.
வேதத்திலே, 38 வருடங்களாக பெதஸ்தா குளத்தின் கரையிலே படுத்திருந்த அந்த திமிர்வாதக்காரன் வேதனையோடு தண்ணீர் கலக்கப்படும்பொழுது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு யார் உண்டு, ஒருவரும் இல்லை என்று சொல்லி புலம்பினான். ஆண்டவர் அவன்மேல் மனதுருகி, “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்று சொல்லி அவனைக் குணமாக்கினார்.
எனக்காக யார் இருக்கிறார்கள் என்று புலம்புகின்ற சந்தர்ப்பம் சங்கீதக்காரருக்கும் வந்தது. “எனக்காகப் பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன். ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்” (சங். 69:20) என்று அவர் சொல்லுகிறார். ஒருநாள் அந்தச் சங்கீதக்காரர் தன்னுடைய முழு நம்பிக்கையையும் கர்த்தர்மேல் வைத்து, “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பம் இல்லை” (சங். 73:25) என்று சொன்னார்.
தேவபிள்ளைகளே, எனக்காக யார் உண்டு என்று சொல்லி கலங்காமல், அதைரியப்படாமல், ‘எனக்காக கர்த்தர் உண்டு’ என்று சொல்லி, அவர்பேரில் விசுவாசமாயிருங்கள்.
நினைவிற்கு:- “இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” (எரே. 32:27).