No products in the cart.
அக்டோபர் 15 – இக்கபோத்!
“மகிமை இஸ்ரவேலை விட்டுப்போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்” (1 சாமு. 4:21).
ஏலியின் குமாரனும், ஊழியத்தை துன்மார்க்கமாக செய்தவனுமாகிய பினெகாஸ் என்பவரின் மனைவி குழந்தை பெற்றெடுத்தபோது, தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி பெலிஸ்தியரால் பிடிபட்டுப்போனது. பினெகாசும் மரணமடைந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்த குழந்தைக்கு இக்கபோத் என்று பெயர் வைத்தாள். தேவனுடைய பெட்டி பிடிபட்டுப்போனபடியினால், மகிமை இஸ்ரவேலைவிட்டு விலகிப்போயிற்று என்று அவள் சொன்னாள்.
இன்றைக்கும் அநேக விசுவாசிகளும், ஊழியக்காரர்களும் இக்கபோத்தாக பரிதாபநிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அழைப்பை மறந்து, மகிமை தங்களை விட்டுவிலகுவதை உணராமல், வெளிப்பார்வைக்கு ஊழியக்காரர்களைப்போல நடித்துக்கொண்டிருக்கிறார்கள். பரலோகம் அவர்களுக்கு இக்கபோத் என்று பெயர் சூட்டுகிறது.
“நீ மகிமையை காத்துக்கொள்ளவில்லையே, உன்மேல் வைத்த அபிஷேகத்தின் விலைமதிப்பு உனக்கு தெரியவில்லையே, பாவத்தோடு விளையாடி சிற்றின்பங்களை விரும்பி, இக்கபோத்தாக நிற்கிறாயே” என்று கர்த்தர் புலம்புகிறார்.
என்னுடைய தகப்பனாருடைய ஊழியத்தின் ஆரம்பகாலத்தில், ஒரு பெரிய தேவ ஊழியக்காரர் என்று அழைக்கப்பட்டவர், அவரை சந்தித்து, ‘தம்பி, என்னோடு சேர்ந்து நீ ஊழியம் செய்தால், உன்னை வட இந்தியாவிலும், வெளிதேசங்களிலும் அறிமுகம் செய்கிறேன்’ என்றார். அவரைப்பற்றி என்னுடைய தகப்பனாருக்கு ஒன்றும் தெரியாதிருந்தது. அவர் அதற்காக ஜெபித்தார். அப்போது அவருடைய உள்ளத்திலே சமாதானம் இல்லாதிருந்தது.
ஆகவே, தன் சிநேகிதராகிய இன்னொரு ஊழியக்காரரிடத்திலே அவரைக்குறித்து விசாரித்தார். அவர் ‘சகோதரனே, அவரோடு செல்ல வேண்டாம் அவர் ஒரு இக்கபோத். மகிமை அவரைவிட்டு விலகிற்று. அவர் பாவத்தில் விழுந்துபோனார்’ என்று சொன்னார்.
ஊழியத்திற்காக அழைக்கப்பட்ட அநேகர் கொஞ்சகாலமே பிரகாசித்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையிலே சிறிய தவறுகள் பிரவேசித்தன. ஆனாலும் கர்த்தருடைய கிருபை விலகவில்லை. இதனால் அவர்கள், “கிருபை பெருகும்படி இன்னும் பாவத்தில் ஜீவிப்பேன்” என்று துணிகரம் கொண்டார்கள். இதனால் முடிவில், மகிமை அவர்களைவிட்டு எடுபட்டுப்போயிற்று. தேவபிரசன்னமும் எடுபட்டுப்போயிற்று.
அவர்கள் ஒருதரம் பிரகாசிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போய்விட்டார்கள் (எபி. 6:4-6). இன்றைக்கும் மனச்சாட்சியிலே சூடுண்ட பொய்யர்களாய் விளங்குகிறார்கள்.
அப்படித்தான் சிம்சோன், பாவத்தோடு விளையாடிக்கொண்டேயிருந்தார். வேசியின் பின்னால் நடந்துகொண்டேயிருந்தார். ஒருநாள், தெலீலாள் மடியில் அவருடைய தலைமுடி சிரைக்கப்பட்டுப்போனபோது, ஆவியானவர் அவரைவிட்டு விலகி, இக்கபோத்தாக ஆனார். தேவபிள்ளைகளே, எல்லாக்காவலோடும், உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக் கொள், அதுவே உனக்கு ஜீவன்” (நீதி. 4:13).