No products in the cart.
அக்டோபர் 05 – யாக்கோபு!
“உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும், மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே” (ஆதி. 32:28).
ஜெபத்தில் வல்லமையாகப் போராடுகிற பக்தனாகிய யாக்கோபை இன்றைக்கு சந்திக்கவிருக்கிறோம். யாக்கோபு என்ற பெயருக்கு போராடுகிறவன், ஏமாற்றுகிறவன், எத்தன் என்பதெல்லாம் அர்த்தமாகும். ஈசாக்குக்கும், ரெபெக்காளுக்கும் பிறந்த யாக்கோபும், ஏசாவும் இரட்டைப்பிள்ளைகள். யாக்கோபு ஆடு, மாடு மேய்க்கிறவராயும், ஏசா வேட்டைக்காரனும், வனசஞ்சாரியுமாயிருந்தார்.
யாக்கோபுக்கு எப்பொழுதும் கர்த்தர்மேலும், அவருடைய ஆசீர்வாதங்கள்மேலும் தாகமிருந்துகொண்டேயிருந்தது. சேஷ்டபுத்திரபாகத்தை எப்படியாவது தனக்குரியதாக்கிக்கொள்ளவேண்டும் என்ற வாஞ்சையினாலும், தன் சகோதரரின் அலட்சியத்தினாலும் கூழைக்கொடுத்து, அதற்குப் பதிலாக சேஷ்டபுத்திரபாகத்தை பெற்றுக்கொண்டார். தன் தகப்பனாகிய ஈசாக்குக்கு வயது முதிர்ந்ததினால், கண்கள் பார்வையற்றுப்போனதைப் பயன்படுத்தி, ஏசாவாக நடித்து, தகப்பனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.
தன் மாமனாகிய லாபான் பலமுறை கூலியை மாற்றினாலும் பல்வேறு விதங்களிலே தனக்கான மந்தையைப் பெரியதாக்கிக்கொண்டார். மட்டுமல்ல, முழு இரவும் கர்த்தரோடு போராடி, “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடமாட்டேன்” என்று ஜெபித்து, கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெற்று, இஸ்ரவேலாய் மாறினார். இஸ்ரவேல் என்ற வார்த்தைக்கு, ‘தேவனோடும், மனிதனோடும் போராடி மேற்கொள்ளுகிறவன்,’ ‘தேவபிரபு’ என்பது அர்த்தமாகும்.
யாக்கோபுக்கு எப்படியாகிலும் முன்னேறவேண்டுமென்ற வாஞ்சையும் தாகமும் இருந்ததுபோல, ஒவ்வொரு விசுவாசிக்கும் ஆவிக்குரிய ஜீவியத்திலே முன்னேறுவதிலும், ஜெபத்திலே கர்த்தரோடு போராடிப் பெற்றுக்கொள்ளுவதிலும் தாகம் இருக்கவேண்டியது அவசியம். ஆவிக்குரிய வரங்களையும், வல்லமைகளையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டுமானால் யாக்கோபின் தீர்மானம் உங்களுக்குத் தேவை.
எலிசாவும்கூட, எப்படியாகிலும் இரட்டிப்பான வரங்களைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்று எலியாவுக்கு சீஷரானார். எலியாவின் கைகளுக்கு தண்ணீர் வார்த்தார். இந்த விடாப்பிடியான வாஞ்சைதான், ஆவியின் வரங்களை இரட்டிப்பாய் எலிசாவுக்கு பெற்றுத்தந்தது.
மட்டுமல்ல, யாக்கோபு தன் வாழ்நாளெல்லாம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து அவர்களை சந்தோஷப்படுத்தினார். இயேசுகிறிஸ்துவும் தனது முப்பது வயதுவரை பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். பின்பு, எல்லாவிதத்திலும் பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவர் சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (பிலி. 2:8). உங்களுக்கு அந்த கீழ்ப்படிதல் உண்டா?
யாக்கோபு பெற்றோருக்குக் கீழ்ப்படிந்துச் சென்றபடியால், கர்த்தர் அதைக் கண்டு யாக்கோபுக்குத் தரிசனமானார். தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையிலேயும்கூட, கர்த்தருக்கும், ஊழியக்காரருக்கும் கீழ்ப்படியும்போது, கர்த்தர் உங்களுக்கு சொப்பனங்களையும், தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் தந்தருள்வார். உலகப்பிரகாரமாகவும், ஆவிக்குரியப்பிரகாரமாகவும் நிச்சயமாய் உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பீர்கள்.
நினைவிற்கு:- “யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!” (எண். 24:5).