No products in the cart.
அக்டோபர் 04 – மெல்கிசேதேக்கு!
“அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து” (ஆதி. 14:18).
இன்றைக்கு நாம் சந்திக்கப்போகிறவர், ஆசாரியனும், இராஜாவுமாயிருந்து, ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனவரான மெல்கிசேதேக்கு என்பவராவார். இவர் யார், எப்படி வந்தார், அவருடைய பூர்வீகம் என்ன, என்பதெல்லாம் பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அவர் தேவகுமாரனுக்கு ஒப்பானவராகவும், நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவும் இல்லாதவருமாகவும், தாயும் தகப்பனும் வம்ச வரலாறும் இல்லாதவராகவும் வாழ்ந்தார்.
முதன்முதல் மெல்கிசேதேக்கை ஆதியாகமம் புத்தகத்திலே ஒரு ஊழியக்காரனைப்போல காண்கிறோம். வெற்றிபெற்று வந்த ஆபிரகாமுக்கு அப்பமும், திராட்சரசமும் கொடுத்து அவரது களைப்பை மாற்றி, அவரை இவர் ஆற்றித்தேற்றுகிறதைப் பார்க்கிறோம் (ஆதி. 14:18-20).
சங்கீத புத்தகத்திலே மெல்கிசேதேக்கை கர்த்தருடைய பராக்கிரமத்தின் நாளிலே, மகிமையான காரியங்களைச் செய்கிறவராகக் காண்கிறோம் (சங். 110:3). எபிரெயர் நிருபத்திலே, அவரைப் பிரதான ஆசாரியனாக, கிறிஸ்துவுக்கு ஒப்பானவராகக் காண்கிறோம் (எபி. 7:1-17).
ஆபிரகாமுக்கு எதிர்கொண்டு வந்த மெல்கிசேதேக்கு, உன்னதமானவருடைய பிரதிநிதியாகவே நின்றார். ஆபிரகாம் இராஜாக்களை முறியடித்துவந்ததைப்போலவே, நீங்களும் உலகம், மாம்சம், பிசாசு என்ற சத்துருக்களை முறியடித்து, கர்த்தருடைய வருகையிலே எடுத்துக்கொள்ளப்படவேண்டும். அப்பொழுது ஜெயங்கொண்ட கிறிஸ்துதாமே நமக்கு எதிர்கொண்டு வருவார் (1 தெச. 4:16).
வேதத்திலே ஆதி. 14:18ல்தான் முதல்முறையாக, “உன்னதமான தேவன்” என்கிற பதம் பயன்படுத்தப்படுகிறது (ஆதி. 14:18). தேவன் ஆபிரகாமை காரானூரிலே அழைக்கும்போது, “மகிமையின் தேவன்” என்றும் (அப். 7:2), ஆபிரகாமுக்கு தொண்ணூற்றொன்பது வயதானபோது, தேவன் தன்னை “சர்வவல்லமையுள்ள தேவன்” என்றும் (ஆதி. 17:1) வெளிப்படுத்தினார்.
வேதத்திலே, உன்னதமான தேவன் என்கிற பதம், இன்னும் பல சந்தர்ப்பங்களில் இடம்பெறுகிறது. “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்” (சங். 91:1). “அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். அவரை (கிறிஸ்துவை) உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படிச் செய்தார்” (எபே. 1:3,21). “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட, உட்காரவும் செய்தார்” (எபே. 2:7).
உன்னதமானவருடைய ஆசாரியனாகிய மெல்கிசேதேக்கு தோற்றுப்போன லோத்தையும், இராஜாக்களையும் எதிர்கொண்டு வரவில்லை. ஜெயங்கொண்ட ஆபிரகாமையே எதிர்கொண்டுவந்தார். வெளிப்படுத்தின விசேஷம் முழுவதிலும், “ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ” என்ற வார்த்தை ஒன்பதுமுறை இடம்பெறுகிறது.
“உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவா. 16:33) என்று இயேசு சொன்னார் அல்லவா? தேவபிள்ளைகளே, உலகத்தை ஜெயித்த இயேசுவின் நாமத்தினாலே, நீங்களும் ஜெயங்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்” (வெளி. 21:7).