No products in the cart.
செப்டம்பர் 12 – எப்பொழுதும் எரியட்டும்!
“பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது” (லேவி. 6:13).
பழைய ஏற்பாட்டில் ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள பலிபீடத்தில் அக்கினி எரிந்துகொண்டேயிருக்கவேண்டும் என்றும் அது அணைந்துபோகக்கூடாது என்றும் கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டுச் சொன்னார். ஆம், இந்த அக்கினி அணைக்கப்படக்கூடாத ஒரு அக்கினி. தொடர்ந்து எரியவேண்டிய ஒரு அக்கினி. மேன்மையான, விசேஷமான ஒரு அக்கினி. சில காடுகளில் தீப்பற்றி எரியும்போது ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்து சாம்பலாகின்றன. அது அழிக்கிற அக்கினி. கர்த்தர் குறிப்பிட்ட அக்கினியோ எரிவதைத் தடுத்து நிறுத்தக்கூடிய அக்கினி.
சில ஆண்டுகளுக்குமுன்பு ஈராக்கின் அதிபதி சதாம் உசேன் குவைத் தேசத்தில் உள்ள எண்ணெய் கிணறுகளின்மேல் குண்டுகளைப் பொழிந்து அவற்றைத் தீப்பற்றி எரியும்படி செய்தார். அது அழிக்கிற ஒரு அக்கினி. அணைக்கப்படவேண்டிய ஒரு அக்கினி. அது அணைக்கப்படாமல்போனால் வானமண்டலமானது கரியமிலவாயுவினால் நிறைந்து, ஆகாய மண்டலத்தைப் பாழாக்கி, மனுக்குலத்தின் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்.
சதாம் உசேன் பற்றவைத்த அந்த அக்கினியை அமெரிக்கர்கள் அணைத்தார்கள். ஆனால் கர்த்தர் போடவந்த அக்கினி அழிப்பதற்குரிய அக்கினி அல்ல, அணைந்துவிடக்கூடிய அக்கினியுமல்ல, அது நம்மை எரிந்து பிரகாசிக்கச்செய்யும் அக்கினி. நம் வாழ்க்கையைச் சுத்திகரிக்கக்கூடிய அக்கினி. பாவசுபாவங்களையும், சுயநலன்களையும், மாம்ச இச்சைகளையும் சுட்டெரித்துப்போடுகிற அக்கினி.
இந்த அக்கினி எரிந்துகொண்டேயிருக்கவேண்டும். பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டேயிருக்கவேண்டும். அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது என்று வேதம் சொல்லுகிறது (லேவி. 6:13). கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற இந்த பரிசுத்த ஆவியின் அக்கினியை அவித்துப்போட்டுவிடாதேயுங்கள். அசட்டைபண்ணிவிடாதேயுங்கள். உங்களில் இருக்கிற அக்கினி கர்த்தருடைய வருகைப்பரியந்தம் தொடர்ந்து எரிந்துகொண்டேயிருக்கட்டும்.
அன்று யோவான் ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தார். ஆனால் இயேசுவோ, நமக்கு பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுக்கிறவர். நம்மில் இருக்கிற அக்கினி அணைந்துவிடாமல் தொடர்ந்து பற்றி எரிந்துகொண்டிருக்கும்படி உன்னத எண்ணெயினால் நம்மேல் அனல்மூட்டி எழுப்புகிறவர்.
பெந்தெகொஸ்தே நாளில் ஏறக்குறைய நூற்றிருபது சீஷர்கள் மேல்வீட்டறையில் ஊக்கமாய் ஜெபித்தபோது, இந்த அக்கினி பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல இறங்கிவந்தது. அக்கினிமயமான நாவுகள் ஒவ்வொருவர்மேலும் இறங்கி அமர்ந்தது. வேதம் சொல்லுகிறது, “அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்” (அப். 2:4).
தேவபிள்ளைகளே, நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆவியினால் நிரம்பி, தேவனை மகிமைப்படுத்தி, துதித்து இந்த அக்கினியைத் தொடர்ந்து உங்களில் பற்றி எரியும்படி செய்வீர்களாக! அப்பொழுது சாத்தானால் உங்களை நெருங்கமுடியாது. பாவ சோதனைகள் ஒருபோதும் உங்களை மேற்கொள்ள முடியாது.
நினைவிற்கு:- “என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்” (சங். 39:3).