No products in the cart.
செப்டம்பர் 08 – பாடுகளும், தேவபிரசன்னமும்!
பாடுகளும், தேவபிரசன்னமும்!
“என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக். 1:2,3).
பாடுகளின் நேரத்தில் பலர் பதறிப்போய்விடுகிறார்கள். நெருங்கிய சொந்தபந்தங்களை இழக்கும்போது ஏற்படும் துன்பத்தை தாங்கமுடியாமல் தவிக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சிலர் கிறிஸ்துவையே மறுதலித்து பின்வாங்கிப்போய்விடுகிறார்கள். பாடுகளின் மத்தியிலும் தேவ பிரசன்னத்தை அனுபவிப்பது என்பது ஒரு இனிமையானதும், மேன்மையானதுமான அனுபவமாகும்.
ஆகவேதான், சோதனைகளில் அகப்படும்போது அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் என்று அப். யாக்கோபு ஆலோசனை கூறுகிறார். பாடுகளில் களிகூரும்போது சாத்தான் வெட்கப்பட்டுப்போய்விடுவான். தேவனுடைய பிரசன்னம் அளவில்லாமல் நம்மை நிரப்ப ஆரம்பித்துவிடும்.
இயேசு கிறிஸ்து நாற்பது நாட்கள் உபவாசமிருந்து ஜெபித்தபோது, சோதனைக்காரன் வந்து சோதித்தான். சாத்தானுடைய சோதனைகள் கடினமாகவே இருந்திருக்கக்கூடும். ஆனால், கர்த்தரோ அந்த சோதனைகளில் ஜெயம் பெற்றார்.
வேதம் சொல்லுகிறது, “அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்” (மத். 4 :11). பாடுகளுக்குப் பின்பாக தேவ தூதர்களின் பணிவிடையும், தேவனுடைய ஆறுதலும் அரவணைப்பும் இருக்கிறது.
ஆகவே, பாடுகளும், உபத்திரவங்களும் உங்களிடத்தில் வரும்போது அவைகளை எதிரிகளாக எண்ணி முறுமுறுக்காதிருங்கள். நண்பர்களாக எண்ணி அழையுங்கள். உங்களுடைய விசுவாசத்தின் உறுதியையும், கர்த்தர்மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பையும் வெளிப்படுத்தக் கிடைத்த பொன்னான தருணங்களாக அவைகளை எண்ணிக்கொள்ளுங்கள்.
யோபு பக்தனுக்கு பாடுகள் வந்தன. அந்தப் பாடுகளால் தேவ பிரசன்னத்தைவிட்டு அவரைப் பிரிக்கமுடியவில்லை. “ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10) என்று அவர் திடமாக எண்ணியதே அதன் காரணம்.
சோதனைக்கு அப்பால் நான் புடமிடப்பட்ட பொன்னைப்போல பிரகாசிப்பேன் என்ற உறுதி அவருக்கு இருந்ததினால் பாடுகள் அவரை துவண்டுவிடச்செய்யவில்லை. தேவ பிரசன்னத்திலே நிலைத்து நின்றார். இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பாருங்கள். “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையை சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்” (எபி. 12:2) அல்லவா?
“ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்” (எபி. 12:3).
தேவபிள்ளைகளே, அவரே உங்களை கரம் பிடித்து நடத்துவார்.
நினைவிற்கு:- “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலன் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்” (2 கொரி. 12:9).