Appam, Appam - Tamil

ஜூலை 13 – ஏற்றதாயிருக்கிறது!

“கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைத் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது” (சங். 147:1).

தேவனுக்கு ஏற்றது எது என்பதை சங்கீதக்காரர் இங்கே சொல்லுகிறார். துதித்தலே கர்த்தருக்கு ஏற்றதும், நமக்கு இன்பமுமானதுமாயிருக்கிறது. நீங்கள் கர்த்தருக்கு ஏற்றது எது என்பதை அறிந்திருக்கவேண்டும்.

கர்த்தர் நம்முடைய நாவை அவரைத் துதிப்பதற்காகவே கொடுத்திருக்கிறார். ஆம் ஒளியைக் கொடுக்க சூரியனைப் படைத்தவர், நட்சத்திரங்களை காலக் குறிப்புக்காக படைத்தவர், மரங்களை நல்ல கனி கொடுக்க படைத்தவர், நம்முடைய நாவை அவரைத் துதிப்பதற்காகவே படைத்திருக்கிறார்.

‘படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தன்னை வணங்க’ என்பது ஒரு தமிழ் அறிஞரின் பாடல். ஆம், நம்மை ஆண்டவர் தம்மை ஆராதிக்கவே சிருஷ்டித்தார். அதற்காக நம்முடைய வாயும் நாவும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மனிதனோ தன்னுடைய நாவை புறங்கூறுதலுக்கும், சண்டைக்கும், வீண் வார்த்தைக்கும் பயன்படுத்துகிறான். நாவு சிருஷ்டிக்கப்பட்டதின் நோக்கத்தை அறியாமல் போய்விடுகிறான். அப். பவுல் எழுதுகிறார், “அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்” (எபே. 5:4). ஆம், துதிப்பதே ஏற்றது.

சிலர் அடிக்கடி வெற்றிலையை சுண்ணாம்புடன் சேர்த்து வாயிலே மெல்லுவதால் நாவெல்லாம் வெந்துபோயிருக்கிறதைக் கண்டிருக்கிறேன். முடிவிலே அதே நாக்கிலே கொடிய புற்றுநோய் ஏற்பட்டு நாக்கையே எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது கண்ணீர்விட்டு கதறுகிறார்கள். அப்படியே யாரெல்லாம் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதற்கும், அவதூறுகளை பரப்புவதற்கும், வதந்திகளைப் பேசி மற்றவர்களை புண்படுத்துவதற்கும் தங்கள் நாவைப் பயன்படுத்துகிறார்களோ, முடிவில் அவர்களெல்லாம் நாவிலே நியாயத்தீர்ப்பு வரும்போது கலங்குவார்கள், நடுங்குவார்கள்.

ஒரு நாள் ஏசாயா தீர்க்கதரிசி தேவ பிரசன்னத்திற்கு வந்தபோது, “ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன். அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே” (ஏசா. 6:5) என்று கலங்கினார். கர்த்தர் மனம் இரங்கி அக்கினி குறட்டால் ஏசாயாவின் வாயைத் தொட்டு: “இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது (ஏசா. 6:7) என்றார். அன்று முதல் ஏசாயாவின் நாவு கர்த்தரைத் துதிக்கப் பயன்பட்டது. கர்த்தருடைய வார்த்தைகளை தீர்க்கதரிசனமாய் உரைக்கப் பயன்பட்டது. துதித்தலே ஏற்றதும், இன்பமுமானது. உங்களுடைய நாவை கர்த்தரைத் துதிப்பதற்கே பயன்படுத்துங்கள்.

பல வேளைகளில் நமக்கு முன்பாக எரிகோ கோட்டையின் மதில்கள் வருகின்றன. எதை எடுத்தாலும் தடைகள்; முன்னேறமுடிவதில்லை. அந்த நேரத்தில் மனம் சோர்ந்து முறுமுறுத்துக்கொண்டிருக்கக் கூடாது. கர்த்தரைத் துதித்து ஆரவாரித்து எக்காளத்தை முழக்கவேண்டும். அன்று எரிகோ கோட்டையின் அலங்கம் இடிந்து விழுந்ததுபோல உங்களுடைய வாழ்க்கையிலுள்ள எல்லாத் தடைகளும் உடைந்து விழும் (யோசுவா. 6:20). தேவபிள்ளைகளே, துதித்தலே ஏற்றது.

நினைவிற்கு:- “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” (சங். 34:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.