Appam, Appam - Tamil

ஜூலை 17 – மழையைப்போல வருவார்!

“கர்த்தரை அடையும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது. அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார்” (ஓசி. 6:3).

நம் தேவன் உன்னதங்களிலிருக்கிறார். நாம் பூமியிலிருக்கிறோம். உன்னதத்திலிருந்து இறங்கி வருகிற மழையைப்போல அவர் பூமிக்கு இறங்கிவருகிறார். வானாதிவானங்களில் இருந்து பூமியில் வாழும் அவருடைய பிள்ளைகளாகிய நம்மை நோக்கி இறங்கி வருகிறார். எத்தனை மகிழ்ச்சியான காரியம் இது!

மழை இறங்கிவரும்போது வறண்டுகிடக்கிற குளங்களெல்லாம் நிரம்பி ஆறுகளாய்ப் பாய்ந்து ஓடஆரம்பிக்கின்றன. அவர் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவரானபடியால், ஏரிகளெல்லாம் நிரம்பி அணைக்கட்டுகளின் வழியாய் தண்ணீர் புறப்பட்டு வரும். தேசத்தைச் செழிப்பாக்கும்.

எங்கேயோ இருக்கும் வானத்திலிருந்து வந்து, பூமியிலே பெய்யும் மழையானது பூமியிலுள்ள மண்ணோடு ஒன்றாகக் கலந்து தண்ணீராக ஓடுகிறது. அப்படித்தான் உன்னதங்களிலே வாழ்கிற இயேசு நமக்காக பூமியிலே இறங்கிவந்தார். கல்வாரி சிலுவையிலே நமக்காக நொறுக்கப்பட்டார், பிழியப்பட்டார். முழு இரத்தத்தையும் ஊற்றிக்கொடுத்தார். அவருடைய இரத்தம் முழுவதும் கல்வாரி மேட்டிலே ஊற்றப்பட்டு செந்நிறமாய் நமக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. நம்முடைய பாவங்கள், சாபங்கள், நோய்களையெல்லாம் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறது.

மழை என்பது, கல்வாரியின் இரத்தத்துக்கு மாத்திரமல்ல, பரிசுத்த ஆவியானவருக்கும் அடையாளமாகும். இந்த கடைசி நாட்களிலே கர்த்தர் தம்முடைய ஆவியை பின்மாரி மழையைப்போல ஊற்றிக்கொண்டிருக்கிறார். மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்பது கர்த்தருடைய வாக்குத்தத்தம் அல்லவா?

சபை பாகுபாடின்றி கர்த்தர் தமது அபிஷேகத்தை ஊற்றிக்கொண்டிருக்கிறார். கர்த்தருடைய வருகைக்கு முன்பாக ஒரு பெரிய பின்மாரியின் மழை ஊற்றப்படத்தான் போகிறது. யாரெல்லாம் அந்த மழைக்காக தாகத்தோடு காத்திருக்கிறார்களோ அவர்கள்மேல் அவர் முன்மாரி பின்மாரியைப்போல வருவார்.

ஒரு மனிதனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை செழிப்பாக்குகிறது எது? விசுவாசிகளுடைய வாழ்க்கையிலே மகிமையான கனிகளைக்கொண்டுவருவது எது? ஆம்! அது ஆவியானவரின் அபிஷேகம்தான். ஆவியானவர்தான் வேதத்தின் ஆழங்களை நமக்குப் போதித்து ஆத்துமாவைச் செழிப்பாக்குகிறவர்.

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய அபிஷேகத்திற்காக தாகம்கொள்ளுவீர்களாக. வாஞ்சையோடு அவரை நோக்கிப்பார்த்து, “ஆண்டவரே, நீர் வாக்குப்பண்ணினதுபோல மழையாக எங்கள்மேலே வாரும். எங்கள் உள்ளத்திலே பெரிய எழுப்புதலை கட்டளையிடும். வாரும் ஆண்டவரே” என்று அழைப்பீர்களாக!

நினைவிற்கு:- “புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார். அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்” (சங். 72:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.