Appam, Appam - Tamil

ஜூலை 21 – உதவும் வழி!

“அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்” (அப். 12:5).

ஆதித்திருச்சபையார் ஜெபத்தின் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்திருந்தார்கள். “அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி, யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான்” (அப். 12:2,3). அப்பொழுது விசுவாசிகள் தாங்கள் ஜெபிக்காததினால் அப்போஸ்தலனாகிய யாக்கோபை இழந்தோம் என்றும், அதுபோல பேதுருவையும் இழந்துவிடக்கூடாது என்பதையும் உணர்ந்தார்கள்.

வேதம் சொல்லுகிறது, “அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள். ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது. தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தபடியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா” என்றான் (அப். 12:5-8). அந்தபடியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்றதாக வேதத்தில் வாசிக்கிறோம்.

பேதுரு சிறைச்சாலையில் இருந்தபோது விசுவாசிகளெல்லாரும் ஊக்கமாய் ஜெபம்பண்ணினார்கள். அந்த ஊக்கமான ஜெபம் தேவதூதனை கீழே இறங்கப்பண்ணிற்று. சிறைச்சாலையை அசைத்தது. பேதுருவை விடுதலையாக்கி வெளியே கொண்டுவந்தது.

ஒருமுறை ஒரு அருமையான சகோதரி, “என் பிள்ளைகள் பரீட்சைக்கு போகும்போது, அவர்கள் பரீட்சை எழுத ஆரம்பிக்கும் நேரத்தில், நான் முழங்கால்படியிடுவேன். அவர்கள் பரீட்சை எழுதி முடியும்நேரம்வரையிலும் முழங்காலிலேயே நின்று அவர்களுக்காக ஜெபித்துக்கொண்டிருப்பேன்” என்று சொன்னார்.

ஆம், பரீட்சை எழுதும் பிள்ளைகளோடு நாம் பரீட்சை அறைக்குள் செல்ல முடியாது. அருகிலிருந்து உற்சாகப்படுத்த முடியாது. ஆனால், முழங்கால்படியிட்டு ஜெபிப்போமானால், நாம் நம்முடைய ஆவியிலே அவர்களோடுகூட இருக்கிறோம். கர்த்தர் அவர்களுக்கு ஞானத்தைத் தரும்படி ஜெபிக்கிறதினால், தேவஞானத்தை அவர்கள் பெறச்செய்கிறோம். அவர்களை வெற்றிசிறக்கப்பண்ணுகிறோம். தேவபிள்ளைகளே, ஜெபிப்பீர்களா? ஜெபத்தின்மூலமாய் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்களா?

நினைவிற்கு:- “எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான். அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை” (யாக். 5:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.