Appam, Appam - Tamil

ஜூலை 26 – பிரதான புத்திமதி!

“நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்” (1 தீமோ.2:1).

ஆவிக்குரிய தகப்பனாகிய அப். பவுல், தன்னுடைய நிருபங்களிலெல்லாம் ஏராளமான புத்திமதிகளை எழுதினாலும், அவைகளிலே பிரதானமான புத்திமதியாக ஜெபத்தைக்குறித்து எழுதுகிறார். அந்த ஜெபம் தேசத்திலுள்ள இராஜாக்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும், பதவிகளில் உள்ளவர்களுக்காகவும் மன்றாடிப்பண்ணவேண்டிய ஒரு ஜெபம்.

ஒரு குறிப்பிட்ட தேசத்திலுள்ள ஒரு பெரிய பட்டணம் ஒன்றில் ஜெபத்தின்மூலம் நற்செய்திப் பணியாற்றும்முறை துவங்கப்பட்டது. அந்தப்பணியிலே, அந்த நகரத்தில் உள்ள அனைவரையும் கர்த்தர் சந்திக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு, தனிப்பட்ட நபருக்காகவும், அரசாங்கத்திற்காகவும், அதிகாரிகளுக்காகவும் ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகின்றன.

நகரத்தை பல பிரிவுகளாகப் பிரித்து அங்கே ஆளுகிற ஆயிரக்கணக்கானவர்களுடைய பெயர்களைப் பட்டியலிட்டு, அங்குள்ள சபைகள்மூலமாக அவர்கள் ஜெபித்துவருகிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் சந்திக்கப்பட்டுவிட்டால் தேசம் முழுவதுமே சந்திக்கப்பட்டுவிடும் என்பது அவர்களுடைய அசைக்கமுடியாத விசுவாசம்.

நம்முடைய தேசத்திலும், ஆளுகிற ஜனங்களின் பெயர்களைப் பட்டியலிட்டு அப்படி ஜெபம்பண்ணவேண்டியது எவ்வளவு அவசியம்! அப். பவுல் சொல்லுகிறார், “நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்” (1 தீமோ. 2:2,4).

நாம் கர்த்தருடைய வார்த்தையின்படி ஜெபிக்காவிடில் என்ன நடக்கும்? தேசமெங்கும் கலகங்கள் ஏற்பட்டுவிடும். அமைதலற்றுப்போய்விடும். சமாதானம், சந்தோஷம் எடுபட்டுப்போய்விடும். மனிதர்களிடையே நல்லொழுக்கமும், தேவபக்தியும் காணப்படாமல் போய்விடும். அப்படிப்பட்ட தீமையான சம்பவங்கள் நம் தேசத்தில் வருவதற்குமுன்பாக நாம் நமது உத்திரவாதத்தை உணர்ந்து ஜெபிக்கவேண்டும்.

அப். பவுல் தருகிற பிரதானமான புத்திமதியை ஏற்றுக்கொள்ளவேண்டும். தேசத்திலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும், இராஜாக்களுக்காகவும், மந்திரிகளுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும், அவர்களுடைய இரட்சிப்புக்காகவும், அவர்களுடைய ஆசீர்வாதத்திற்காகவும், கர்த்தருடைய வருகைக்காக அவர்கள் ஒவ்வொருவரும் ஆயத்தப்படும்படியாகவும், நாம் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும், ஸ்தோத்திரங்களையும் ஏறெடுக்க வேண்டும்.

தேவபிள்ளைகளே, தேசத்திலே அமைதி வேண்டுமானால், தேசத்தின் அதிகாரத்திலுள்ள அனைவருக்காகவும், ஜெபிக்கவேண்டியது அவசியம். இன்றே கர்த்தருடைய சமுகத்தில் அமர்ந்து ஜெபிக்கத் துவங்குங்கள்.

நினைவிற்கு:- “நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது” (1தீமோ. 2:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.