No products in the cart.
ஜூலை 06 – யுத்த வீரனாய்!
“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (யோசு. 1:5).
யுத்த வீரனான யோசுவாவுக்கு கொடுத்ததுபோலவே, இன்றைக்கு ஆவிக்குரிய யுத்தம் செய்துகொண்டிருக்கிற நமக்கும்கூட கர்த்தர், “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை” என்று வாக்குத்தத்தம் கொடுக்கிறார்.
கர்த்தர் மோசேயைத் தெரிந்துகொண்டபோது, இஸ்ரவேல் ஜனங்களை கானானை நோக்கி நடத்தும்படி கூறினார். ஆனால் யோசுவாவை தெரிந்துகொண்டபோது, யுத்த வீரனாய் கானானிலுள்ள ஏழு ஜாதிகளையும் முப்பத்தோரு ராஜாக்களையும் மேற்கொண்டு, அதைச் சுதந்தரித்து இஸ்ரவேலருக்கு பங்கிட்டுக் கொடுக்கவேண்டுமென்று பணித்தார்.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே அடிமைகளாயிருந்தார்கள். மோசேயினுடைய தலைமையிலே பிரயாணிகளாய் மாறினார்கள். ஆனால் யோசுவாவின் தலைமையிலோ அவர்கள் பலத்த வீரர்களாய் மாறினார்கள். இதுபோலவே நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக பாவ அடிமைத்தனத்திலே வாழ்ந்தோம். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபோதோ அவர் பரம கானானாகிய பரலோகராஜ்யத்தை நோக்கி நம்மை வழிநடத்திக்கொண்டுவருகிறார்.
மட்டுமல்ல, பரிசுத்தாவியானவர் நம்மை அபிஷேகம்பண்ணி வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு போரிட்டு ஜெயம் கொள்ள உன்னத பெலனைத் தருகிறார். சாத்தான் தனக்குக் கொஞ்சகாலம்மாத்திரமே உண்டு என்று அறிந்து, அதிகமான அசுத்த ஆவிகளை சேனை சேனையாய் பூமியிலே இறக்கிக்கொண்டிருக்கிறான். பரிசுத்தவான்களோடே கடுமையான போர் தொடுத்துக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு விசுவாசியின் மேலும் அக்கினியாஸ்திரங்களை எய்துகொண்டேயிருக்கிறான்.
சத்துருவின் தந்திரம் அறிந்து (1 பேதுரு 5:8) சிதறடிக்கிறவன் முகத்துக்கு முன்பாக வருகிறதை அறிந்து அரண்களை காக்கிறவர்களாய், வழியைக் காவல்பண்ணுகிறவர்களாய், அரையைக் கட்டிக்கொண்டவர்களாய், பெலனை மிகவும் ஸ்திரப்படுத்தினவர்களாய் நாம் முன்னேறிச் செல்லவேண்டும் அல்லவா? (நாகூம் 2:1).
இலங்கை இராணுவத்தைக்குறித்து பல வருடங்களுக்கு முன்பாக செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியை வாசித்தேன். முழு உலகத்திலும் ஒழுங்கீனமான இராணுவ வீரர்கள் இலங்கை இராணுவ வீரர்கள்தான் என்பதே அந்த செய்தி.
இராணுவம் என்று ஒன்று இருந்தால் அதிலே கட்டுப்பாடு கண்டிப்பாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் ஜெயம் பெறமுடியாது. அப்படியானால் கர்த்தருடைய சேனையிலே நின்றுகொண்டிருக்கிற நமக்கு எவ்வளவு அதிகமான கட்டுப்பாடு தேவை! ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும் ஒழுக்கம் மிகவும் அவசியம். தேவபிள்ளைகளே, வேத வசனத்தின்படி ஒழுக்கத்தை கற்றுக்கொண்டு ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்குள் நீங்கள் அடங்கியிருக்கும்போதுதான் ஜெயங்கொண்டவர்களாய் விளங்கமுடியும்.
நினைவிற்கு:- “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” (2 கொரி. 10:4).