Appam, AppamAppam - Tamil

ஜுன் 18 – கோபம்!

“நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள் (சங். 4:4).

கோபம் என்பது தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு உணர்ச்சியாகும். சரியான காரணங்களுக்காக, சரியான நபரிடம், சரியான முறையிலே, சரியான அளவு கோபம் கொள்வதில் தவறு இல்லை. அதே நேரம், கட்டுக்கடங்காத கோபம் ஆபத்தானது.

உள்ளத்திலே நீண்டநாள் கோபத்தைத் தரித்திருந்தால் அது கசப்புகளுக்குள்ளும், வைராக்கியங்களுக்குள்ளும், பழி வாங்குதலுக்குள்ளும் வழிநடத்தும். ஆகவே கோபம்கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள். அப். பவுல், ஒருவரையொருவர் கோபமூட்டாமலிருங்கள் என்று எழுதுகிறார் (கலா. 5:26).

சிலர் ஒருவர்மேல் உள்ள கோபத்தை இன்னொருவர்மேல் காண்பிப்பார்கள். கணவன்மேலுள்ள கோபத்தினால் பிள்ளைகளை அடித்து துன்புறுத்துவார்கள். திடீரென்று அந்தக் கோபம் வீட்டிலுள்ள நாய்கள், பூனைகள் மேலெல்லாம் திரும்பும். மாமியார் மருமகளை கோபித்துக்கொள்ள, மருமகள் மாமியாரை கோபித்துக்கொள்ள, காரணமில்லாத சண்டைகளினால் முடிவிலே மன அமைதியும், மன சமாதானமும் இல்லாமல் போய்விடும்.

என்னுடைய தகப்பனார் கல்லூரியில் படிக்கும்போது, யாராவது அவரை புண்பட பேசிவிட்டாலோ, அவருடைய குறைகளை சுட்டிக்காண்பித்தாலோ அவருக்கு மகா கோபம் வந்துவிடும். அந்த கோபத்தினால் மற்றவர்களை அடிக்கிறவராயிருந்தார். ஆனால் இயேசு அவரை இரட்சித்தபோது, தன் கோப சுபாவத்தை மாற்றிக்கொள்ள பல நாட்கள் உபவாசமிருந்து ஜெபம்பண்ணினார்.

‘கோப நேரத்தில் மற்றவர்களை அடிக்காதபடி எனக்குக் கிருபை செய்யும்’ என்று கண்ணீருடன் மன்றாடினார். மட்டுமல்ல, ‘கிறிஸ்துவின் சாந்தத்தை எனக்குத் தாரும்’ என்று ஜெபித்தார். கர்த்தர் அந்த ஜெபத்தைக் கேட்டு கட்டுக்கடங்காத கோபத்தின்மேல் அவருக்கு ஜெயத்தைத் தந்தார்.

உங்களுக்கு திடீரென்று கோபம் வந்து யாரையாவது புண்பட பேசிவிட்டால் முடிந்தவரையிலும் மிக சீக்கிரத்திலே அவர்களிடம் சமாதானமாகப் பேசி மன்னிப்பு கோருங்கள். அப்படிச் செய்வதனால் எத்தனையோ ஆசீர்வாதங்களையும், கிருபைகளையும் நீங்கள் பெற முடியும். மன்னிப்பு கேட்டு ஒப்புரவாகும்போது நட்பும் உறவும் நீடித்திருக்கும்.

யாக்கோபு சொல்லுகிறார், “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” (யாக். 1:19,20). அப். பவுல் கோபம் எவ்வளவு நேரம் வரைக்கும் நீடிக்கலாம் என்ற கேள்விக்கு நல்ல ஒரு பதிலைத் தருகிறார். “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” (எபே. 4:26).

ஒரு பகல்பொழுதுக்கு மேலாக கோபம் நீடிக்குமானால் அது பிசாசுக்கு இடம் கொடுப்பதாயிருக்கும். கர்த்தருடைய வருகை எந்த நேரம் இருக்குமென்று தெரியாது. கோபத்தோடும், வைராக்கியத்தோடும், கசப்போடும் இருந்தால் வருகையிலே கைவிடப்படவேண்டியதாயிருக்குமே. தேவபிள்ளைகளே, கோபம் உங்களை ஆளவொட்டாதிருங்கள்.

நினைவிற்கு:- “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்” (மத். 5:22)

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.