Appam, Appam - Tamil

பிப்ரவரி 19 – பணிந்து ஆராதியுங்கள்!

“இப்பொழுதும் இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து (உபா. 26:10).

நம்முடைய தேசம் இயற்கையாகவே பக்தியுள்ள தேசம்தான். இறைவன் என்று எண்ணுபவரை பயபக்தியோடு தொழுதுகொள்ளுகிற தேசம்தான். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”, “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” போன்ற பழமொழிகள் நிறைந்த தேசம்தான். ஆனாலும், உண்மையான தேவனை அறிந்துகொள்ளாமல் அநேக உலகத்தார் அங்கலாய்க்கிறார்கள், அலைந்து திரிகிறார்கள்.

கிருபையாய் தேவாதி தேவன் நமக்குத் தன்னை வெளிப்படுத்தச் சித்தமானார். நம்மைத் தேடி வந்து தூக்கி எடுத்து, நம்முடைய பாவங்களையெல்லாம் தம்முடைய இரத்தத்தினால் கழுவிச் சுத்திகரித்தார். அவருடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிற பெரிய பாக்கியத்தைத் தந்தார்.

இவ்வளவு நன்மைகளைச் செய்த ஆண்டவர் ஒன்றே ஒன்றை நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். கர்த்தருக்கு முன்பாக பணிந்து அவரை ஆராதிக்கவேண்டும் என்பதுதான் அவருடைய அந்த ஒரே எதிர்பார்ப்பு. அப்படியே, அவரை ஆராதிக்கிறவர்கள்தான் அவருடைய சாட்சியாக, விசுவாசிகளாக, உண்மைத் தொண்டர்களாக விளங்கமுடியும்.

நம் தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன். அவரே ஆராதனைக்கும் துதிக்கும், ஸ்தோத்திரத்துக்கும், கனத்துக்கும் பாத்திரராயிருக்கிறார். அவர் ஒருவரே நம்முடைய அன்புக்குப் பாத்திரர். நம்முடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் அவரில் அன்புகூரவேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

எனவேதான், தாவீது இராஜா நம்மைப் பார்த்து, “நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள். அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே” (சங். 95:6,7) என்று அழைக்கிறார்.

பணிந்து, குனிந்து என்கிற வார்த்தைகள் எல்லாம் நமக்கு இருக்கவேண்டிய தாழ்மையே சுட்டிக்காண்பிக்கிறது. பெருமையோடும், அகங்காரத்தோடும் அவரை ஆராதிக்கக்கூடாது. தாழ்மையோடும் அன்போடும் அவரை ஆராதிக்க வேண்டும். அதுவே கர்த்தர் விரும்புகிற அலங்காரம். “பரிசுத்த அலங்காரத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்” (சங். 96:9) என்று வேதம் சொல்லுகிறது.

சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு எப்படிப்பட்ட சபைகள் வேகமாக வளர்ந்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள முற்பட்டார்கள். அதிலே எந்தெந்த சபைகள் ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுத்ததோ, எந்தெந்த சபைகள் ஆவியோடும் உண்மையோடும் கர்த்தரை தொழுதுகொண்டதோ அந்த சபைகளே வளர்ந்து பெருகின என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

தேவபிள்ளைகளே, ஆராதிக்கிற சபைகள் வளர்கின்றன. ஆராதிக்கிற குடும்பங்கள் சமாதானமாய் இருக்கின்றன. ஆராதிக்கிற ஜெபக்குழுக்கள் ஆத்துமாக்களை ஆதாயம் செய்கின்றன. காரணம் ஆராதனையின் தேவன் ஆராதிக்கிறவர்களோடுகூட இருக்கிறார்.

நினைவிற்கு:- “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை (ரோம. 12:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.