situs toto musimtogel toto slot musimtogel link musimtogel daftar musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

ஜனவரி 30 – தேவ சித்தத்தில் நிலைத்திருங்கள்!

தேவ சித்தத்தில் நிலைத்திருங்கள்!

“உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” (1 யோவா. 2:17).

வேதத்திலே என்றென்றைக்கும் உள்ள ஆசீர்வாதங்களைக்குறித்து எழுதப்பட்டிருக்கிறது. சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணும்போது கர்த்தர் அங்கே என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுவார் (சங். 133:1-3). கர்த்தரை மேய்ப்பராய்க்கொண்டிருக்கும்போது நாம் கர்த்தருடைய வீட்டிலே என்றென்றைக்குமாய் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்போம். என்றென்றைக்குமுரிய நித்தியஜீவனை கர்த்தர் வாக்குப்பண்ணியிருக்கிறார் (யோவா. 17:3).

மேலே குறிப்பிட்ட வசனத்தைக் கவனியுங்கள். தேவனுடைய சித்தத்தின்படி நாம் செய்யவேண்டும். அப்பொழுதுதான் என்றென்றைக்கும் நிலைத்திருப்போம். இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்த நோக்கமே தேவசித்தத்தை எப்படி நிறைவேற்றுவது என்பதை நமக்கு போதிக்கும்படியாகத்தான்.

அவர் பூமிக்கு வருவதற்குமுன்பாக நித்தியத்திலே பிதாவைப் பார்த்து, “தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்” (எபி. 10:7) என்றார். அவருடைய ஊழியமும், கிரியைகளும் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறதாகவே இருந்தது. “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” என்று அவர் பல முறை கூறினார் (யோவா. 4:34, 6:38).

அவருக்கென்று ஒரு சுய விருப்பம் இருந்தது. எல்லோரையும்போல அவருக்கும் சுயசித்தம் இருந்தது. ஆனால் அவர் தமது மனமும் மாம்சமும் விரும்பினதைச் செய்யாமல் முழுக்க முழுக்க தன்னுடைய சித்தத்தை பிதாவின் சித்தத்திற்கு அர்ப்பணித்திருந்தார். “நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; …. எனக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால்….” என்றார் (யோவா. 5:30). சிலுவையின் அடிவாரத்திற்கு வருகிற நேரம் வந்தபோதும், “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஒப்புக் கொடுத்தார் (மத். 26:39: லூக். 22:42).

இயேசு பிதாவின் சித்தம் செய்தது மட்டுமல்ல, நாமும்கூட பிதாவின் சித்தம் செய்யும்படியாக நமக்கு போதித்திருக்கிறார். தன் சீஷர்களுக்கு கர்த்தருடைய ஜெபத்தை சொல்லிக்கொடுத்தபோது, “பரலோகத்திலே உம்முடைய சித்தம் செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று ஜெபிக்கும்படி சொன்னார். ஆம், பூமியிலே தேவனுடைய சித்தம் நிச்சயமாகவே செய்து முடிக்கவேண்டும். தேவனுடைய சித்தம் செய்வதற்கு உங்களை அர்ப்பணிப்பீர்களா?

சில தேவசித்தங்களை தேவன் நமக்கு அறிவித்திருக்கிறார். “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெச. 4:3). “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெச. 5:18). “புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 பேது. 2:15).

தேவபிள்ளைகளே, வேதத்தை வாசித்து அதன்படி நடவுங்கள். கர்த்தர் தம்முடைய சித்தத்தின் மையத்திலே உங்களைக் காத்துக்கொள்ளுவார்.

நினைவிற்கு:- “தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்” (லூக். 12:47).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.