situs toto musimtogel toto slot musimtogel link musimtogel daftar musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

அக்டோபர் 24 – யோசியா!

“இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் (1 இரா. 13:2).

பிறப்பதற்கு முன்பாகவே பெயரிடப்பட்டவர்களின் வரிசையிலே, ஐந்தாவதாக இடம்பெறுபவர் யோசியா இராஜா ஆவார்.  ஆமானின் மகனாகிய இவர், தனது எட்டாம் வயதிலே இராஜாவாக நியமிக்கப்பட்டு, முப்பத்தோரு வருடங்கள் எருசலேமில் அரசாண்டார். கர்த்தருக்காக வைராக்கியமாக பெரிய எழுப்புதலை உண்டாக்கினார். தன் ஆளுகையின் எட்டாம்வருடத்தில் கர்த்தரைத் தேடத்தொடங்கினார்.

தேசத்திலிருந்த விக்கிரகாராதனையின் மேடைகளையெல்லாம் அழித்து, தேவாலயத்தைப் பழுதுபார்க்க விசேஷமான ஆட்களை ஏற்படுத்தினார். அந்த நாட்களிலே ஆசாரியனாகிய இல்க்கியா நியாயப்பிரமாணப் புத்தகத்தைக் கண்டெடுத்தான். இது இராஜாவின் மனதை உற்சாகப்படுத்தினது.

எரேமியா தீர்க்கதரிசியும், இவருக்கு உதவியாயிருந்தார். ஏராளமான சீர்த்திருத்தங்களைத் தன் இராஜ்யத்திலே செய்து, கர்த்தரைப் பிரியப்படுத்தினார். இவருடைய ஆளுகையின் பதினெட்டாம்வருடம் பஸ்கா பண்டிகை விசேஷமாக ஆசரிக்கப்பட்டது (2 நாளா. 35:19).

அவ்வளவு சீரும், சிறப்பும், பேரும், புகழுமாய் இருந்த இராஜா, கர்த்தரிடத்திலே விசாரிக்காமல், தேவசித்தம் அறியாமல், பார்வோன் நேகோவை எதிர்க்கப்போனார். சில விசுவாசிகளைக் கர்த்தர் ஆசீர்வதிக்கும்போது, தேவனுடைய ஆலோசனையில்லாமல், தங்கள் பார்வைக்கு நலமான காரியங்களைச் செய்யும்படி துணிவடைந்துவிடுவார்கள்.

தாங்கள் என்ன செய்தாலும், கர்த்தர் தங்கள் பின்னாக வரவேண்டும் என்று எண்ணிக்கொள்ளுவார்கள். இவர்கள் தன்னம்பிக்கையைச் சார்ந்திருப்பார்களே தவிர, கர்த்தரைச் சார்ந்திருப்பதில்லை. தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை எவ்வளவு உயர்த்தினாலும், எல்லாவற்றையும் அவரிடத்திலே கேட்டே செய்யுங்கள்.

எகிப்தின் இராஜாவாகிய பார்வோன் நேகோ, “நீ என்னோடு யுத்தத்திற்கு வரவேண்டாம். நான் வேறு வழியாகதான் போகிறேன்” என்று சொன்னபோதிலும், யோசியா தன் முகத்தை அவனைவிட்டுத் திருப்பாமல் அவனோடே யுத்தம்பண்ண வேஷம்மாறிச் சென்றான்.

யோசியா இராஜா தன்னுடைய சுயத்தால் நடத்தப்பட்டு, யுத்தத்திற்குச் சென்றார். யுத்தத்தில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. எருசலேமுக்கு செல்வதற்கு முன்பாக வழியிலே மரித்துப்போனார் (2 நாளா. 35:22-24).

இந்த யோசியா இராஜாவைக்குறித்து, எரேமியா தீர்க்கதரிசி புலம்பல் பாடினார். “கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும், அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே” என்று புலம்பி அழுதார் (புல. 4:20).

தாவீதைப் பாருங்கள், எத்தனையோ யுத்தங்களுக்குச் சென்றாலும், ஒவ்வொருமுறையும் தேவசித்தத்தை அறிந்து கர்த்தரிடத்தில் கேட்டு விசாரித்துதான் யுத்தத்திற்குச் செல்லுவார். தேவபிள்ளைகளே, நீங்கள் காயப்படாதிருக்க கர்த்தருடைய சித்தத்தின்படி செய்யுங்கள். கர்த்தர் உங்களை நேசிக்கிறார். உங்களுடைய உயர்வுக்கெல்லாம் அவர்தான் காரணம்.

நினைவிற்கு:- “ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே” (புல. 4:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.