No products in the cart.
அக்டோபர் 23 – கோரேசு!
“கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான்” (ஏசா. 44:28).
பிறப்பதற்கு முன்பாகவே பெயரிடப்பட்டவர்களின் வரிசையிலே, நான்காவதாக இடம்பெறுவது கோரேசு ஆகும். இவன் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன். ஆட்டிடையர்களால் வளர்க்கப்பட்டு, பிறகு இராணுவத்தில் சேர்ந்து படிப்படியாய் முன்னேறியவன்.
இவன் பிறப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாகவே, கர்த்தர் அவனைக்குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தார். அவன் என் மேய்ப்பன் என்று அன்போடு சொன்னார். அவன் ஒரு யூதனல்ல. பெர்சியா நாட்டைச் சேர்ந்த புறஜாதியான். ஆனாலும் கர்த்தர் ஒரு நோக்கத்தோடு, அவனைத் தெரிந்துகொண்டார்.
பாபிலோன் சாம்ராஜ்யத்திற்குப் பிறகு, கர்த்தர் மேதியர், பெர்சியர் சாம்ராஜ்யங்களை எழுப்பினார். தரியு, மேதிய இராஜாவாயிருந்தார். ஆனால், இந்த கோரேசு, பெர்சியா இராஜ்யத்தை ஸ்தாபித்தார். இவருடைய காலம் கி.மு 559 முதல் 538 வரையாகும். இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கும்படியும், எருசலேம் தேவாலயத்தை மறுபடியும் கட்டும்படியாகவும், கர்த்தர் அவரைத் தெரிந்துகொண்டார்.
“எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு” என்றும் கோரேசு இராஜா விசுவாச அறிக்கை செய்தார். அப்படியே எருசலேமின் மதில்கள் கட்டப்படுவதற்கும், தேவாலயம் அஸ்திபாரமிட்டு எழுப்புவதற்கும், தன்னாலான எல்லா உதவிகளையும், தாராளமாகச் செய்தார்.
‘நான் அபிஷேகம்பண்ணின கோரேசு’ என்று கர்த்தர் சொல்லுவதைப் பாருங்கள். பழைய ஏற்பாட்டில் இரண்டு புறஜாதி மனுஷர்மேல் கர்த்தருடைய அபிஷேகம் இருந்தது. பிலேயாம்மேல் தீர்க்கதரிசன அபிஷேகம் இருந்தது. அடுத்தது, கோரேசு இராஜாவின்மேல் இராஜாக்களுக்குரிய அபிஷேகம் இருந்தது. தானியேல் தீர்க்கதரிசி, சில காலம் கோரேசு இராஜாவின் அரண்மனையில் இருந்தார் (தானி. 6:28).
இந்த கோரேசைக் குறித்து கர்த்தர் அருமையான சாட்சி கொடுத்தார். “எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான்” என்று அவர் சொன்னார். ஏனோக்கு, “தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்” (எபி. 11:5). தாவீதை தன் இருதயத்திற்கு ஏற்றவனாய் தேவன் கண்டார். “எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான்” என்று அவர் சாட்சி கொடுத்தார் (அப். 13:22). நீங்கள் யாராய் இருந்தாலும் சரி, தேவனுடைய சித்தம் இன்னதென்று அறிந்து செய்யுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களில் பிரியப்படுவார். ‘என் பிரியமே’ என்று அழைப்பார்.
கர்த்தர் கோரேசைக்குறித்து சொல்லுகிற வார்த்தைகளை வாசித்து, தியானியுங்கள். “கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு அவனுக்குச் சொல்லுகிறதாவது; நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்” (ஏசா. 45:1,2) என்றார். தேவபிள்ளைகளே, கோரேசை முன்னறிந்து, பிறப்பதற்கு முன்பாகவே பெயரிட்டு, வாக்குத்தத்தத்தைக் கொடுத்தவர், இந்த புதிய ஏற்பாட்டுக்காலத்திலே உங்களை எவ்வளவு அதிகமாய் நேசிப்பார்!
நினைவிற்கு:- “நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்” (ஏசா. 45:4).