No products in the cart.
அக்டோபர் 07 – அறியப்படாத சூனேமியாள்!
“ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனைப் போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்” (2 இரா. 4:8).
சூனேமியாளின் பெயர் என்னவென்று தெரியவில்லை. சூனேம் என்பது ஒரு ஊரின் பெயர். எலிசா சூனேமுக்குப் போயிருந்தபோது, அங்கே ஒரு ஸ்திரீ அவரை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள். அவளுக்கு குழந்தை இல்லாவிட்டாலும், கணவன் வயது சென்றவராயிருந்தாலும், கணவனோடு அன்புடனும் ஐக்கியத்துடனும் வாழ்ந்துவந்தாள்.
சூனேமியாளின் பெயர் மட்டுமல்ல, அவளுடைய கணவனின் பெயரும் என்னவென்று தெரியவில்லை. அறியப்படாத ஒரு குடும்பம். ஆனால், அவர்களுடைய வாழ்க்கை பரிசுத்தமாகவும், பயபக்தியுள்ளதாகவும், ஊழியக்காரர்களை உபசரிக்கிற பண்பு நிறைந்ததாகவும் இருந்ததைப் பார்க்கிறோம்.
அறியப்படாத சூனேம் ஊரைச்சேர்ந்த அந்த ஸ்திரீ, ஊழியக்காரனை தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். உண்ண உணவு கொடுத்து, தங்க வீட்டைக் கொடுத்து, இன்னும் மற்ற வசதிகளையும் செய்துகொடுத்தாள்.
இயேசு சொன்னார், “சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும், தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத். 10:42).
சூனேமியாளின் அன்பின் உபசரணை எலிசாவின் உள்ளத்தைத் தொட்டது. அவன் கேயாசியைப் பார்த்து: “இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்” (2 இரா. 4:13).
அவளுக்கு குழந்தையில்லை என்பதை எலிசா அறிந்தபோது, ‘ஒரு பிராண உற்பத்தி காலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய்’ என்றார். அப்படியே அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெற்றாள்.
கர்த்தருடைய நாமத்தில் உங்களை யாராவது உபசரிக்கும்போது, அந்த உபசரிப்பில் மனம் மகிழ்ந்து நின்றுவிடாமல், அவர்களுடைய தேவை என்னவென்று அறிந்து, கர்த்தருடைய சமுகத்திலே விண்ணப்பம் செய்யுங்கள். சூனேமியாளின் பெயர் என்னவென்று அறியாதிருந்தாலும் கூட, வேதத்திலும், கர்த்தருடைய உள்ளத்திலும் அவளுக்கு நீங்காத இடம் கிடைத்தது.
சூனேமியாளின் மகன் மரித்தபோது, எந்த அறையை எலிசாவுக்கு சூனேமியாள் கொடுத்தாளோ, அந்த அறையிலே மரித்த பிள்ளையின் சடலம் வைக்கப்பட்டிருக்கிறதைக் கண்டு, உள்ளே போய் அறைக்கதவைப் பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தபோது, அந்த சடலம் அனல்கொண்டதுடன், அந்த பிள்ளை உயிரோடு எழுந்தது.
அறைக்கதவை பூட்டினதின் இரகசியம் என்ன? அறைக்கதவு மூடப்படும்போது, உலக வெளித்தொடர்பு அறுந்துவிடுகிறது. அப்படி நீங்கள் ஜெபிக்கும்போது, உலக சிந்தைகளிலிருந்தும், உலகக் கவலைகளிலிருந்தும், விடுதலையாக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் முழு இருதயத்தோடு ஜெபிக்கமுடியும்.
நினைவிற்கு:- “மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை” (மத். 6:1).