No products in the cart.
செப்டம்பர் 28 – சுகமளிக்கும் அதிகாரம்!
“வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” (மத். 28:18).
இயேசு கிறிஸ்துவுக்கு சுகமளிக்கும் அதிகாரமுண்டு. ஆகவேதான் அதிகாரத்தோடு வியாதிகளுக்கு கட்டளையிடும்போது, வியாதி விலகிப்போகிறது. அதிகாரத்தோடு அவர் கட்டளையிடும்போது, அசுத்தஆவிகளும் பிசாசுகளும் நீங்கிப்போகிறதினாலே ஜனங்கள் தெய்வீக ஆரோக்கியத்தைப் பெறுகிறார்கள்.
அதிகாரத்தைக்குறித்து நூற்றுக்கதிபதி ஒருமுறை சொன்னார், “நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான்; மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்” (மத். 8:9).
நூற்றுக்கதிபதியின் அதிகாரம் நூறு வேலைக்காரர்கள்மேல் இருக்கிறது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவன் வேலைக்காரனை வேலைவாங்குகிறான். அந்த வேலைக்காரனும் போ என்ற அதிகாரமுள்ள வார்த்தையை எஜமானிடமிருந்து கேட்டவுடனே புறப்பட்டுப்போகிறான்.
ஆனால் அந்த நூற்றுக்கதிபதி வியாதியைப் பார்த்து போ என்றால் அது போவதில்லை. அந்த அதிகாரம் இயேசுகிறிஸ்துவுக்கு மட்டுமே உண்டு. ஆகவேதான் நூற்றுக்கதிபதியின் வேலைக்காரன் வியாதிப்பட்டபோது அவன் இயேசுவண்டை வந்து, “என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதம் பிடித்து கொடிய வேதனைப்படுகிறான்” என்று சொல்லி சொஸ்தமாக்க அவரை வேண்டிக்கொண்டான். “இயேசு நூற்றுக்கதிபதியை நோக்கிப்பார்த்து, நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்” (மத். 8:13).
இயேசு சுகம் அளித்த பல சந்தர்ப்பங்களை நீங்கள் வாசித்துப்பார்த்தால் அவர் வியாதிகளுக்கு அதிகாரத்துடனே கட்டளையிட்டதைக் காண்பீர்கள். அசுத்த ஆவிகளை அதிகாரத்தோடு துரத்தினதையும் காணலாம். சூம்பின கையை உடைய மனுஷனை நோக்கி அவர் அதிகாரத்தோடு உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான், அவன் கை மறுகையைப்போல சொஸ்தமாயிற்று (மாற். 3:5).
அதிகாரமுள்ள கர்த்தர் ஒரு வார்த்தை சொன்னபோது சூரியன் உண்டானது. நட்சத்திரங்கள் எல்லாம் ஆகாயத்தில் சுழல ஆரம்பித்தன. தனது வாயின் வார்த்தையினாலும் அவர் சகலவற்றையும் சிருஷ்டித்து முடித்தார். அவர் ஒரு வார்த்தை சொன்னபோது ஜாதி ஜாதியான ஜீவ ஜந்துக்களும், நாட்டு மிருகங்களும், ஊரும் பிராணிகளும், காட்டு மிருகங்களும் உருவாயின. அவருடைய வார்த்தையில் அதிகாரமுண்டு. ஆகவேதான் நூற்றுக்கு அதிபதி ஆண்டவரைப் பார்த்து, “ஆண்டவரே நீர் …. ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும். அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்” என்றான் (மத். 8:8).
தேவபிள்ளைகளே, சுகமளிக்கிற ஊழியத்தைச் செய்ய விரும்புகிறீர்களா? கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள். தடையாய் இருக்கிற மலையைப் பார்த்து: “நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ” என்று சொல்லுங்கள் (மாற். 11:23). அப்பொழுது மலைபோன்ற வியாதிகள் சரீரத்தைவிட்டு நீங்கி பாதாளத்திலே தள்ளுண்டுபோகும். கர்த்தர் கொடுத்திருக்கிற அதிகாரத்தின்படியே பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அவன் பயந்து ஓடிப்போவான்.
நினைவிற்கு:- “மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்” (எபி. 2:14,15).