Appam, Appam - Tamil

ஆகஸ்ட் 30 – உன்னைக் காக்கிறவர்!

இந்த சங்கீதத்தைக் கூர்ந்து கவனித்துப்பாருங்கள். “எனக்கு” என்று ஆரம்பித்த இந்த சங்கீதம் 3ம் வசனத்திலிருந்து, “உனக்கு” என்று திரும்புகிறது.

பர்வதங்களை நோக்கி நடந்த தாவீது, கர்த்தர் தனக்கு செய்த நன்மைகளை தன்னைச் சூழ உள்ளவர்களுக்கும் செய்வார் என்பதை உணர்ந்து அந்த வாக்குத்தத்தங்களை அவர்களுக்கும் அறிவிக்கிறார். ‘உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்’ என்று சொல்லுகிறார்.

எருசலேம் பண்டிகைக்காக வரும் ஜனங்கள் தங்கள் பொருட்களை பாதுகாக்கும்படி வேலைக்காரரையும்கூட அழைத்துக்கொண்டு வருவதுண்டு. சில வேளைகளில் இந்த வேலைக்காரர்களும் களைப்பு மேலிட்டு கண் அயர்ந்துவிட்டால் பொருட்கள் திருடப்பட்டுபோய்விடுமே என்று பயந்து கலங்குவார்கள்.

“தூங்குபவன் தொடைதனில் கயிறு ஒன்று திரித்திட தூங்காது திரியும் நரிக்கூட்டம் உண்டே” என்று தமிழிலே ஒரு வேடிக்கையான பாடல் உண்டு.

இன்றைக்கும் குள்ள நரியாகிய சாத்தான் என்று ஒருவன் இருக்கிறபடியினால் அவனுடைய கையிலிருந்து கர்த்தர் நம்மைப் பாதுகாக்கும்படிக்கு உறங்காமலும், தூங்காமலும் கண்காணிக்கிறார். அவருடைய கண்கள் தூங்காத கண்கள். ஆம், உங்களைக் காக்கிறவர் உறங்கார்.

அன்று அவர் நோவாவையும், அவர் குடும்பத்தையும் காத்தார். பெருமழையின் வெள்ளங்கள் மோதியடித்தபோதும் பேழையாய் நின்று காத்தவர், உங்களுக்கு நேராய் வரும் பயங்கரமான அழிவிலிருந்தும், ஆபத்திலிருந்தும், உங்களையும், உங்களுடைய குடும்பத்தினரையும் காத்தருளுவார். உங்களைக் காக்கும்படி அவர் பிளவுண்ட மலையானாரே.

சோதோமின் அழிவிலிருந்து லோத்துவைப் பாதுகாக்க அவன் கரம்பிடித்து வெளியே கொண்டுவந்தவர் உங்களையும் காக்கும்படி தம் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குத் தந்திருக்கிறாரே (ஆதி. 19:16).

ஆம், அவர் உங்களைக் காக்கிறவர் மட்டுமல்ல, உங்களுக்காக இரவும், பகலும் வேண்டுதல் செய்கிறவருமாக இருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோம. 8:26).

சகோதரர்களின் துர்ஆலோசனைகளிலும், கொலை சதிகளிலுமிருந்தும், குழியில் போடப்பட்டதிலிருந்தும் யோசேப்பைக் காத்தவர், உங்களையும் சகல வஞ்சகக் கண்களிலிருந்தும், பொறாமையின் ஆவிகளிலிருந்தும், தீமையான செய்வினைகளிலிருந்தும் பாதுகாத்து உங்கள் தலையை உயர்த்தி உங்களை மேன்மைப்படுத்துவார்.

அன்றைக்குத் தாவீதுக்கு விரோதமாக சிங்கம், கரடி, ஆகியவையும் கோலியாத்து சவுல் போன்றவர்களும் எதிர்கொண்டு வந்தபோதிலும், மரணத்துக்கும் தாவீதுக்கும் இடையே ஒரு அடி தூரம் மாத்திரமே இருந்தது என்று சொல்லப்பட்ட கொடிய மரண இருளின் பள்ளத்தாக்கினை எதிர்கொண்டபோதிலும், கர்த்தர் தாவீதைக் கண்மணிபோல் காத்துக்கொள்ள வல்லவராயிருந்தார்.

தேவபிள்ளைகளே, அவர் உங்களையும் பாதுகாப்பார் என்பதை விசுவாசியுங்கள்.

நினைவிற்கு:- “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” (2 நாளா. 16:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.