No products in the cart.
ஜூலை 29 – துணைநிற்கிறேன்!
“உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” (ஏசா. 41:13).
நான் உனக்கு துணைநிற்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் விசுவாசக்கண்களால் இந்த காட்சியை உங்கள் உள்ளத்தில் தியானித்துப்பாருங்கள்.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வவல்லமையுள்ள தேவன், உங்களுக்கு மிக அருகில் வந்து, உங்கள் கையை தன் அன்பின் கரங்களினால் பற்றிக்கொண்டு, மிக அன்போடுகூட, “பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்” என்று சொல்லுகிறார். இந்த அருமையான வாக்குத்தத்தத்தைத் தருகிற தேவனை நன்றியோடு ஸ்தோத்திரிப்பீர்களா?
ஒரு நாள் யாக்கோபுக்கு கர்த்தர் இவ்விதமான ஆறுதல் மொழிகளைக் கொடுத்தார். அவன் தன் சொந்த சகோதரனால் பகைக்கப்பட்டு குடும்பத்தைவிட்டு தனியாக வெளியே ஓடிவரும்போது, அவனுக்குத் துணைநிற்பார் யாருமில்லை. அனாதையாய் இருப்பதைப்போல உணர்ந்தான். அவனுடைய உள்ளம் துயரத்தில் கலங்கித் தவித்தது.
ஆனால் கர்த்தரோ, அவனுக்குத் துணைநிற்கச் சித்தமாகி, ஏணியை தரிசனத்திலே காண்பித்து, அவனோடு அன்பான உடன்படிக்கையையும் செய்தார். யார் அவனுக்கு துணைநில்லாமல் போனாலும் கர்த்தர் அவனுக்கு துணையாக நிற்கிறதை யாக்கோபு கண்டபோது யாக்கோபுடைய மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
இந்த வாக்குத்தத்தத்தை மீண்டும் ஒருமுறை சற்று சிந்தித்துப்பாருங்கள். 1. தேவன் நம் வலதுகையைப் பிடித்திருக்கிறார். 2. பயப்படாதே என்று தேவன் நமக்கு ஆறுதல் சொல்லுகிறார். 3. துணைநிற்கிறேன் என்று தேவன் வாக்களிக்கிறார். எனவே, மூன்றுவிதமான வாக்குறுதிகளை கர்த்தர் இந்த ஒரே வசனத்தில் தருகிறார்.
1. தேவன் நம் வலதுகையைப் பிடித்திருக்கிறார்: – திருமணத்திலே பெண்களின் வலதுகையைப் பிடித்து மணமகனின் கரத்தில் கொடுப்பார்கள். அவர்கள் வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும் ஒருவரையொருவர் பிரியமாட்டோம் என்று உறுதிமொழி கொடுப்பார்கள்.
தேவ கரத்தைப் பற்றியிருக்கும் தேவபிள்ளைகளே, உங்களை அநாதிசிநேகத்தால் சிநேகித்து, நித்தியமான காருண்யங்களால் அரவணைத்துக்கொள்ளுகிற கர்த்தரை நோக்கிப்பாருங்கள். அவர் உங்களைக் கடைசிவரை வழிநடத்த வல்லமையுள்ளவர். வழுவாதபடிக் காக்க வல்லமையுள்ளவர். உங்களில் ஆரம்பித்த நற்கிரியைகளை முடிவுபரியந்தம் நிலைநிறுத்த வல்லமையுள்ளவர்.
2. பயப்படாதே என்று தேவன் நமக்கு ஆறுதல் சொல்லுகிறார்: – வேதம் முழுவதிலும் “பயப்படாதே” என்ற வாக்குத்தத்தம் பல இடங்களில் இடம்பெறுகிறது. பயம்நிறைந்த இந்த உலகத்தில் ஆறுதல் அளிக்கிறவரும், தேறுதல் செய்கிறவருமாக கர்த்தர் உங்களோடுகூட இருக்கிறார். கடல் கொந்தளிக்கலாம்; புயல் வீசலாம். ஆனாலும், கர்த்தர் மிக அன்போடுகூட ‘நீ பயப்படாதே, திகையாதே, நான் உன் தேவன்’ என்று சொல்லுகிறார்.
3. துணைநிற்கிறேன் என்று தேவன் வாக்களிக்கிறார்: – நாம் ஒருபோதும் தனியாய் இருப்பதில்லை. வானத்தின்கீழே திறந்துவிடப்பட்ட நிலைமையிலும் நிற்பதில்லை. நாம் அனாதைகளல்ல. திக்கற்றவர்களல்ல. கர்த்தர் நமக்குத் துணைநிற்கிறார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. ‘தேவனிடத்தில் விசுவாசமாக இருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்’ என்று அன்றைக்கு சீஷர்களை கர்த்தர் தேற்றி ஆறுதல்படுத்தினார்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் அப்படியாய் உங்களையும் ஆறுதல்படுத்துவார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.
நினைவிற்கு:- “நீர் எனக்குத் துணையாயிருந்ததினால் உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்” (சங். 63:7).