bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

மே 14 – புல் பூண்டு!

“பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது” (ஆதி. 1:11).

வெறுமையும் ஒழுங்கின்மையுமாய்க்கிடந்த இந்த பூமியைக் கர்த்தர் சீர்ப்படுத்தச் சித்தமானார். அழகிய மரங்களை முளைக்கச்செய்தார். பூமியில் முக்கியமான மூன்று காரியங்களை உண்டாகச்செய்தார். அவை: 1. புல், 2. பூண்டு, 3. கனி விருட்சங்கள். இவை மூன்றுவகையான கிறிஸ்தவர்களுக்கு நிழலாட்டமாய் இருக்கிறது. இவற்றில் நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சீர்தூக்கிப்பாருங்கள்.

முதலாவதாக, துன்மார்க்கரை வேதம் புல்லுக்கு ஒப்பிடுகிறது. “துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்” (சங். 92:7). இரண்டாவதாக, பொல்லாதவர்களை வேதம் பூண்டுக்கு ஒப்பிடுகிறது. “பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே” (சங். 37:1). அவர்கள் பசும்பூண்டைப்போல வாடிப்போவார்கள்.

மூன்றாவதாக, நீதிமான்களைக் கர்த்தர் கனிதரும் விருட்சத்திற்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். “அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங். 1:3). தேவபிள்ளைகளே, நீங்கள் நல்ல கனிதரும் விருட்சமாய் விளங்குகிறீர்களா?

யோசேப்பின் வாழ்க்கையைப் நோக்கிப்பாருங்கள். அவருடைய வாழ்க்கையிலே எத்தனையோ பாடுகள்; எத்தனையோ உபத்திரவங்கள்; நிந்தைகளையும் அவமானங்களையும் அவர் சகிக்கவேண்டியதிருந்தது. ஆனாலும் அவருடைய வாழ்க்கை கனியுள்ள ஒரு வாழ்க்கையாகவே இருந்தது. வேதம் சொல்லுகிறது, “யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனி தரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்” (ஆதி. 49:22).

கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலே கனியை எதிர்ப்பார்க்கிறார். அவருக்கு நல்ல கனிகளைக் கொடுக்கவேண்டுமென்றும், அந்தக் கனிகள் மிகுதியாய் இருக்கவேண்டுமென்றும் விரும்புகிறார். “நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்” என்று இயேசுகிறிஸ்து சொல்லுகிறார் (யோவா. 15:16).

அநேகருடைய வாழ்க்கையிலே வெறும் இலைகள்தான் காணப்படுகின்றன. அவை பாரம்பரிய இலைகளாகவும், சடங்காச்சார இலைகளாகவும், பெயர்க்கிறிஸ்தவ இலைகளாகவும், பகட்டான இலைகளாகவும் இருந்துவருகின்றன. கர்த்தர் இத்தகைய இலைகளை உங்களிடம் ஒருநாளும் எதிர்பார்த்ததில்லை. இவற்றையெல்லாம் அவர் வெறுக்கவேசெய்கிறார். அவர் உங்களிடமிருந்து ஆவிக்குரிய கனிகளையே எதிர்பார்க்கிறார்.

கனி கொடுக்காத ஒவ்வொரு மரமும் நிலத்தைக் கெடுத்துகொண்டிருக்கிறது. அதற்கு இறைத்த தண்ணீரும், இட்ட உரமும், நிலத்தை உழவும், மண் வெட்டியால் கொத்தியும் பட்டபாடுகள் அனைத்தும் வீண். கனியற்ற ஜீவியம் ஒரு தனிமனிதனை மட்டுமல்ல, அவனோடுள்ள மற்றவர்களையும் கெடுக்கும்.

கர்த்தர் துக்கத்தோடு சொன்னார், “இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை. இதை வெட்டிப்போடு. இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது” (லூக். 13:7). தேவபிள்ளைகளே, கர்த்தருக்கென்று கனி கொடுக்க தீர்மானிப்பீர்களா?

நினைவிற்கு:- “ஆவியின் கனி, சகல நற்குணத்திலும், நீதியிலும், உண்மையிலும் விளங்கும்” (எபே. 5:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.