Appam, Appam - Tamil

பெப்ருவரி 18 – விசுவாசத்தில் ஐசுவரியம்!

“தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?” (யாக். 2:5).

நம் தேவன் விசுவாசத்தில் ஐசுவரியமுள்ளவர். விசுவாசத்தினாலே அவர் உலகத்தையெல்லாம் சிருஷ்டித்தார். விசுவாச வார்த்தைகளை அவர் சொன்னபோது தேவனிடத்திலிருந்து சிருஷ்டிப்பின் வல்லமை புறப்பட்டுப்போய் எல்லாவற்றையும் சிருஷ்டித்தது.

கர்த்தர் விசுவாசத்தில் ஐசுவரியமுள்ளவராய் இருக்கிறதுபோல நாமும் விசுவாசத்தில் ஐசுவரியமுள்ளவர்களாய் மாறவேண்டுமென பிரியப்படுகிறார். சற்று அதைச் சிந்தித்துப்பாருங்கள். விசுவாசத்தினாலே நம்முடைய முற்பிதாக்கள் எல்லாரும் கர்த்தரிடத்தில் நற்சாட்சி பெற்றார்கள்.

விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசம் நம் இருதயத்தைக் கவர்கிறது. அவர் விசுவாசத்தில் பெலவீனனாயிருக்கவில்லை என்று வேதம் சொல்லுகிறது. விசுவாசத்தினாலே கானானை நோக்கி நடந்தார். விசுவாசத்தினாலே வயதான நாளில் ஈசாக்கைப் பெற்றார். விசுவாசத்தினாலே அரிய பெரிய காரியங்களையெல்லாம் சாதித்தார்.

20-ம் நூற்றாண்டின் தலை சிறந்த விசுவாச வீரன் என்றும், விசுவாசத்தின் அப்போஸ்தலன் என்றும் அழைக்கப்பட்டவர்தான் ஸ்மித் விகிள்ஸ்வொர்த் என்பவர். அவர் தம்முடைய ஊழிய நாளில் மரித்துப்போன பதினான்குபேரை உயிரோடு எழுப்பியிருக்கிறார். அவரிலிருந்த விசுவாசத்தின் ஐசுவரியத்தைப் பார்த்த ஜனங்கள் பிரமித்தார்கள்.

அவர் சொன்னார்: ‘என்னுடைய உள்ளத்தில் விசுவாசத்தை உருவெடுக்கச்செய்வது வேதவசனம்தான். அதை நான் மிகவும் நேசிக்கிறதினால் எப்போதும் அதை நான் சுமக்கிறேன். என் கால்களுக்கு காலணிகளையும், சரீரத்திற்கு மாற்று உடைகளையும் அணிய நான் மறந்துபோனாலும் வேதப்புத்தகத்தை எடுத்துச்செல்ல நான் ஒருபோதும் மறப்பதில்லை’ என்றார். நீங்கள் விசுவாசத்தில் பெலப்பட வேதவசனங்களை உங்கள் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்துங்கள்.

அநேகர் விசுவாசமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். விசுவாசமில்லாமல் இருக்கிறதினாலே கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்யமுடியாமல்போய்விடுகிறது. ‘அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு’ என்று இயேசு சொன்னார் (யோவா. 20:27).

விசுவாசத்தில் தரித்திரனாய் இராமல் ஐசுவரியனாயிரு. தேவனுடைய ஆலோசனைகள், கட்டளைகள், எதிர்பார்ப்புகளெல்லாம் நீங்கள் அவிசுவாசியாயிராமல் விசுவாசத்தில் ஐசுவரியமுள்ளவர்களாய் விளங்கவேண்டுமென்பதற்காகத்தான்.

பூமியின் அனுதின வாழ்க்கையிலும் விசுவாசமில்லாமல் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நம்பாமல் சந்தேகங்களுடன் வாழ்ந்தால் அந்தக் குடும்ப வாழ்க்கை நரகமாயிருக்கும். அதுபோலவே பிள்ளைகள்மேல் பெற்றோருக்கும், பெற்றோர்மேல் பிள்ளைகளுக்கும் நம்பிக்கை இருந்தால்தான் அந்தக் குடும்பம் ஆசீர்வாதமாக இருக்கும்.

தேவபிள்ளைகளே, எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால்தான் கர்த்தருக்காகப் பெரிய காரியங்களைச் செய்யமுடியும்.

நினைவிற்கு:- “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்” (2 தீமோ. 1:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.