No products in the cart.
நவம்பர் 16 – முடிவில் சிந்தை
“தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” (எபி. 13:7).
வேதப்புத்தகத்தில், அநேக பரிசுத்தவான்களுடைய முன்மாதிரியான வாழ்க்கையைக்குறித்து கர்த்தர் கிருபையாக எழுதியிருக்கிறார். அவர்களுடைய விசுவாசமும், கர்த்தர்மேல் அவர்கள் கொண்டிருந்த அன்பும், நம்மை மகிழ்வித்து பரவசப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட விசுவாச வீரர்களின் நடக்கையின் முடிவை நன்றாக சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் என்று அப். பவுல் எழுதுகிறார்.
இன்றையத்தினம் யோசேப்பினுடைய மகிமையான முடிவைக் குறித்து தியானிப்போம். “விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக் குறித்துக் கட்டளைகொடுத்தான்” (எபி. 11:22). யோசேப்பின் முடிவுகாலம் வந்தபோது, அவர் பயப்படவோ கலங்கவோ இல்லை. “யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி, தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்று சொல்லி, யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்” (ஆதி. 50:24,25).
யோசேப்பின் இறுதி ஆசை என்ன? ‘என்னுடைய எலும்புகள் எகிப்திலிருக்கக் கூடாது. அது கர்த்தர் வாக்குப்பண்ணின பாலும், தேனும் ஓடுகிற கானானுக்குக் கொண்டுசெல்லப்படவேண்டும். என் எலும்புகள் என் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் எலும்புகளோடு அடக்கம்பண்ணப்படவேண்டும். ஏனென்றால், கடைசி நாளில் உயிர்த்தெழுதல் நடைபெறும். அப்பொழுது என் முற்பிதாக்களுடைய கரம்கோர்த்து வருவேன்’ என்பதே அவரது இறுதி ஆசையாயிருந்தது.
யோசேப்பு மரித்து நானூற்று முப்பது வருடங்கள் கழித்து, கர்த்தர் இஸ்ரவேலரை சந்தித்து கானானுக்குப் புறப்படப்பண்ணினபோது, அவர்கள் யோசேப்பின் எலும்புகளையும்கூட எடுத்து, கானானை நோக்கிப் புறப்பட்டார்கள். முன்பாக மரித்த பரிசுத்தவானாகிய யோசேப்பின் எலும்புகள், பின்னாலோ உயிரோடிருக்கிற இஸ்ரவேலர்கள். கர்த்தருடைய வருகையிலே இப்படித்தான் இருக்கும். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிக்கும் நாமும் இமைப்பொழுதில் மறுரூபமாகி, கிறிஸ்து இயேசுவுக்கு எதிர்கொண்டு போவோம்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வருகையில் காணப்படும்பொருட்டு உங்களுடைய வாழ்க்கையும்கூட யோசேப்பின் வாழ்க்கையைப்போல கறைதிரையற்றதாயிருக்கட்டும். அவர் பாவத்துக்கு விலகி ஓடினார். பயங்கரமான சோதனைகளைப் பொறுமையுடன் சந்தித்தார். தெய்வீக குணாதிசயங்களில் பூரணமாகத் தேர்ச்சி பெற்றார். அவரை முன்மாதிரியாகக்கொண்டு நாம் வாழ்வோமேயானால் நமது வாழ்வு ஆசீர்வாதமானதாக அமையும்.
நினைவிற்கு:- “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோம. 8:28).