No products in the cart.
ஆகஸ்ட் 29 – இளைப்பாறுதலுக்கு திரும்பு!
“என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மைசெய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு” (சங். 116:7).
சிலருக்கு எப்பொழுது பார்த்தாலும் ஒருவித கலக்கமும், இனம் புரியாத பயமும், ஏதோ தீமையான ஒன்று நடந்துவிடுமோ என்கிற நினைவும் வாட்டிக்கொண்டேயிருக்கும். சிறு பிரச்சனையானாலும் அவர்களுடைய நிம்மதியைக் குலைத்துவிடும். உடலில் ஒரு சாதாரணக் கட்டி ஏற்பட்டால்கூட ‘இது புற்றுநோயாக இருக்குமோ?’ என்று பயப்படுவார்கள். பிள்ளைகள் ஏதோ காரணமாகப் பள்ளிக்கூடத்திலிருந்து தாமதமாக வீடு திரும்பினால்கூட, ‘ஐயோ, அவர்களுக்கு ஏதோ விபத்து நேரிட்டுவிட்டதோ?’ என்றெல்லாம் எண்ணிக் கலங்குவார்கள்.
“விசுவாசிக்கிறவன் பதறான்” என்று ஏசாயாவும், “பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்” என்று யோவானும் சொல்லுகிறார்கள். கர்த்தர்மேல் விசுவாசம் வைத்திருக்கிறவர்கள் என்றென்றைக்கும் அசையாத சீயோன் பர்வதத்தைப்போல இருப்பார்கள்.
உங்கள் உள்ளத்தில் கலக்கமும், பயமும் வரும்போது, தாவீதைப்போல உங்கள் ஆத்துமாவைப் பார்த்து, “என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால் உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு” என்று சொல்லுங்கள். நமது கர்த்தர் இளைப்பாறுதல் அளிக்கிற தேவனாக இருக்கிறார்.
தாவீது பக்தனைப்போல மரணத்தின் விளிம்பிலே நடந்தவர்கள் வேறு யாருமில்லை. பல சந்தர்ப்பங்களில் மரணத்திற்கும், அவருக்குமிடையே ஒருசில அடிகள் தூரம் மாத்திரமே இருந்ததைப் பார்க்கிறோம். அவர் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தார். தன்னைவிட பெலம் மிஞ்சிய சத்துருக்களை அவர் எதிர்த்து நின்றார். அவருடைய ஆத்துமா கலங்கின வேளையில் “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு” என்று சொல்லி தன்னைக் கர்த்தருக்குள் திடப்படுத்திக்கொண்டார்.
‘என் ஆத்துமாவே, உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு. இருதயம் கலங்கிக் கொண்டிருந்தது போதும். பய உணர்வு வாட்டி, வதைத்தது போதும். மற்றவர்கள் செய்த துரோகங்களை எண்ணி எண்ணிக் கலங்கியது போதும். இளைப்பாறுதலுக்குத் திரும்பு’ என்று சொல்லுங்கள். ஆம், வேதனைகளை நீங்கள் நீடிக்க விடக்கூடாது. கர்த்தரிடம் ஓடிச்சென்று, அவர் தருகிற முக்கியமான ஆசீர்வாதமாகிய இளைப்பாறுதலைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
ஆனால் தேவனற்ற மக்களுக்கு இளைப்பாறுதல் பெற வழி கிடையாது. “எவ்வளவு பணம் இருந்து என்ன பிரயோஜனம்? நிம்மதி இல்லையே, இரவும் பகலும் இருதயம் கலங்குகிறதே, மரண பயம் வாட்டுகிறதே” என்று அவர்கள் புலம்புகிறார்கள்.
ஒரு தாய் கண்ணீரோடு, “எங்கள் மகள் பெற்றோராகிய எங்களுக்கு துரோகம் செய்துவிட்டு ஒரு புறஜாதியைச் சேர்ந்த வாலிபனோடு ஓடிவிட்டாள். அதை நினைத்து நினைத்து அழுதுகொண்டிருக்கிறோம். எங்களுக்கு ஒரு இளைப்பாறுதலும் இல்லை” என்று சொன்னார்கள்.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய பாதங்களைப் பற்றிக்கொள்வதே துன்பங்களிலிருந்து விடுபட நமக்கிருக்கும் ஒரே வழி. அவர் ஆறுதலும், தேறுதலும் அளிக்கிறவர். மட்டுமல்ல, உங்களுடைய பிரச்சனையைத் தீர்த்துவைக்கிற பலத்த பராக்கிரமசாலியாகவும் இருக்கிறார். அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்பவர்.
நினைவிற்கு:- “அவன் (மனிதனின்) நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவன் வேலைகள் வருத்தமுள்ளது; இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே” (பிர. 2:23).
