No products in the cart.
ஆகஸ்ட் 07 – கர்த்தருடைய பாதத்தில் இளைப்பாறுதல்!
“அவளுக்கு (மார்த்தாளுக்கு) மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்” (லூக். 10:39).
இளைப்பாறுதலின் ஐந்தாவது வழி, கர்த்தருடைய பாதங்களாகும். மார்த்தாளின் சகோதரியாகிய மரியாள் கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, கர்த்தருடைய வசனத்தைக் கேட்டு, அந்த தெய்வீக இளைப்பாறுதலைப் பெற்றுக்கொண்டாள். “மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்” (லூக். 10:42) என்று இயேசு சொன்னார்.
இந்த இளைப்பாறுதலின் வழி மார்த்தாளுக்குத் தெரியவில்லை. அவளுடைய உள்ளம் பலவித கவலைகளினால் அலைமோதிக்கொண்டே இருந்தது. சமையல் வேலைகளைப்பற்றிய கவலையும், குடும்பபாரம்பற்றிய கவலையும், அவளுடைய சமாதானத்தை இழக்கச்செய்தது. பதட்டப்பட்டு இயேசுவினிடத்தில் வந்து, முறுமுறுத்து, “ஆண்டவரே, நான் தனியே வேலை செய்யும்படி, என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும்” என்று புகார் கூறினாள்.
சிலர் கவலைகள் காரணமாக இரத்த அழுத்த நோய்க்கு ஆளாகிறார்கள். சிலரது கவலை, அவர்களுடைய ஆத்துமாவை அழுத்துகிறது. பதட்டமடையச் செய்கிறது. முறுமுறுக்க வழிவகுக்கிறது. ஆனால், தேவனுடைய பிள்ளைகள் தங்களுடைய பாரங்கள், கவலைகள், துக்கங்கள் எல்லாவற்றையும் இறக்கி வைக்கக்கூடிய ஒரு இடத்தை அறிந்திருக்கிறார்கள். அதுதான் கர்த்தருடைய பாதங்கள். “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்” (சங். 55:22).
அப். பேதுரு, “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேது. 5:7) என்று எழுதுகிறார். நீங்கள் கர்த்தருடைய பாதத்தில் அமரும்போது, உலகம் தரக்கூடாத ஒரு மகிமையான சமாதானம் உங்களுடைய உள்ளத்தை நிரப்பிக் காத்துக்கொள்ளும். அப்பொழுது உங்களுடைய பாரங்களெல்லாம் உங்களைவிட்டு நீங்கிப்போகும். “யெகோவா யீரே” என்று மகிழ்ச்சியோடு, சத்தமிட்டுச் சொல்ல முடியும். எனக்காக வழக்காடி யுத்தம் செய்கிற தேவன் உண்டு. அவர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் (சங். 138:8) என்று சொல்லி சந்தோஷப்படுவீர்கள்.
கலக்கமான சூழ்நிலையானாலும், பதட்டமான சூழ்நிலையானாலும் ஜெபிக்க மறந்துபோகாதிருங்கள். நமது கர்த்தர் நம்முடைய ஜெபத்தைக் கேட்பவர் மட்டுமல்ல. நமது ஜெபத்திற்குப் பதிலளிக்கிறவரும்கூட. எந்த பிரச்சனை உங்களுடைய உள்ளத்தை முள்போல குத்திக்கொண்டிருந்தாலும், கர்த்தர் அந்தப் பிரச்சனையை மாற்றி உங்களுக்கு ஆறுதலும் சமாதானமும் அளிப்பார். “காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது” (உன். 2:3).
தேவபிள்ளைகளே, உங்களுடைய பாரங்களை இறக்கி வைக்கிற ஒரு இடம் உண்டென்றால், அது கல்வாரி சிலுவைதான். அங்கே இயேசுகிறிஸ்து உங்களுடைய பாவத்தை சுமந்திருக்கிறார். சாபத்தை முறித்திருக்கிறார். உங்கள் எதிராளியான சத்துருவின் தலையை நசுக்கியிருக்கிறார். அவர் உங்களுக்கு ஆறுதலும், தேறுதலும் தருவார். அவர் மிகச்சிறந்த தேற்றரவாளன் அல்லவா?
நினைவிற்கு:- “ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்” (ஏசா. 66:13).