No products in the cart.
ஜூலை 28 – ஆவியின் அநுக்கிரகம்!
“ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (1 கொரி.12:7).
மனித ஆவியோடு கர்த்தருடைய ஆவி இணைக்கப்படும்போது, நமக்கு ‘ஆவியின் அநுக்கிரகம்’ கிடைக்கிறது. இந்த ஆவியின் அநுக்கிரகம் என்பது என்ன? முதலாவது, கர்த்தர் கிருபையாய்த் தருகிற ஆவியின் வரங்கள். இரண்டாவது, ஆவியின் கனிகள். 1 கொரிந்தியர் 12 மற்றும் 14ம் அதிகாரங்களில் ஒன்பது ஆவியின் வரங்களைக் குறித்தும் விளக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம், கலாத்தியர் 5:22,23லே ஒன்பது ஆவியின் கனிகளைக் குறித்தும் எழுதப்பட்டிருக்கிறது.
எந்த மனிதனுடைய ஆவி, கர்த்தருடைய ஆவியோடு இசைந்திருக்கிறதோ, அவன் ஆவியின் கிருபை வரங்களைப் பெற்றுக்கொள்ளுவான். விசேஷமாக வெளிப்பாட்டு வரங்களைப் பெற்று, கர்த்தரிடமிருந்து அறிவையும், ஞானத்தையும் தெரிந்துகொள்ளுவான். ஆகவே, உங்களுடைய உள்ளம் எப்போதும் கர்த்தரோடு உறவாடுகிறதாயும், தேவனோடு சஞ்சரிக்கிறதாயும் இருக்கட்டும். உங்கள் ஆவியிலே கர்த்தருடைய ஆவியானவர் அசைவாடுவதற்கு எப்போதும் நுண்ணுணர்வு உள்ளவர்களாய் இருங்கள்.
சொப்பனங்களையும், தரிசனங்களையும் ஒரு மனிதன் எந்த பகுதியிலே காண்கிறான்? அவனுடைய ஆவியின் பகுதியில்தான்! கர்த்தருடைய ஆவியானவர் வருங்காலத்தைப்பற்றி அவனுக்கு உணர்த்துகிறார். அவன் அறியாததும், புத்திக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை வெளிப்படுத்துகிறார். இதன் மூலம் தேவனுடைய அறிவின் ஒரு பகுதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
யோசேப்பின் நாட்களில் பார்வோனுக்கு வரப்போகும் பஞ்சத்தைக் குறித்தும், பஞ்சத்துக்கு ஜனங்களை தப்புவிக்கும் வழியைக் குறித்தும் கர்த்தர் சொப்பனம் கொடுத்தார். அர்த்தத்தையோ யோசேப்புக்கு வெளிப்படுத்தினார். அதுபோல, நேபுகாத்நேச்சாருக்கு வருங்காலத்தைப் பற்றிய இரகசியங்களை சொப்பனத்தின்மூலமாய் வெளிப்படுத்தினார். அதன் அர்த்தத்தையோ தானியேலுக்குச் சொல்லிக்கொடுத்தார். மனிதனுடைய ஆவியிலே கர்த்தருடைய ஆவியானவர் வெளிப்பாடுகளைக் கொடுக்கிறார். ஆகவேதான் தேவனுடைய பிள்ளைகள் எப்போதும் கர்த்தருடைய ஆவியானவரால் நடத்தப்பட்டு வெளிப்பாட்டு வரங்களைப் பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.
வனாந்தரத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிமுட்டுகளை எப்படிச் செய்யவேண்டும் என்று அறிவினால் யூகித்து செய்யக்கூடிய வெளிப்பாட்டை கர்த்தர் பெசலேயேலுக்குக் கொடுத்தார். இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோனுக்கு சிறையிருப்பிலே சென்றபோது, எருசலேம் மதில்கள் புதுப்பித்துக் கட்டப்படுவதற்கான வெளிப்பாடுகளை கர்த்தர் நெகேமியாவுக்குக் கொடுத்தார். இதனால் அவர் இடிந்து கிடந்த எருசலேமின் மதிற்சுவர்களையும், அதின் பன்னிரண்டு வாசல்களையும், அருமையாய்க் கட்டி எழுப்பினார்.
தேவபிள்ளைகளே, உங்களுக்கும் அந்த ஆவியானவர் வெளிப்பாட்டைத் தந்தருள்வார். முதலாவது, உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தைச் சுற்றி ஒரு சுவர் கட்டி எழுப்பப்படவேண்டும். கட்டுப்பாடில்லாத உள்ளமானது பாழடைந்த பட்டணத்தைப் போலிருக்கிறது. உங்களைச் சுற்றிலும் மதில் கட்டி எழுப்புவது யார்? பரிசுத்த ஆவியானவர்தான். “நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி. 2:5).
நினைவிற்கு:- “எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” (ரோமர் 8:14).