No products in the cart.
ஜூலை 12 – ஆவியினாலே பெலன்!
“இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று” (லூக். 4:14).
இயேசுகிறிஸ்துவின்மேல் ஆவியானவருடைய பெலன் பரிபூரணமாய் இறங்கி தங்கியிருந்தது. ஆகவேதான் அவர், “கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். தரித்திரருக்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்” என்று முழங்கினார் (லூக். 4:18). ஆவியானவருடைய பெலத்தோடு சகல காரியங்களையும் அவர் செய்து வெற்றி சிறந்தபடியால், அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசம் எங்கும் பரவிற்று.
இன்றைக்கு கர்த்தர் அதே ஆவியானவருடைய பெலத்தை உங்களுக்குத் தர விரும்புகிறார். பெலத்தால் இடைக்கட்டி ஜெயமுள்ள ஜீவியம் செய்ய சத்துவத்தையும் பெலனையும் தர விரும்புகிறார். இது ஆவியானவரால் வருகிற பெலன். பரிசுத்த ஆவி வரும்போது பெலனடைவீர்கள் (அப். 1:8). உன்னதத்திலிருந்து வருகிற பெலத்தால் தரிப்பிக்கப்படுங்கள் (லூக். 24:49) என்று இயேசுகிறிஸ்து சொன்னார்.
பரிசுத்த ஆவியினால் வருகிற பெலனைப் பெற்றுக்கொள்ளும்படியாக சீஷர்கள் எல்லோரும் மேல்வீட்டறையிலே காத்திருந்து ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஆவியானவர் பலமாய் அவர்கள்மேல் இறங்கினார். உன்னத பெலன் அவர்கள்மேல் ஊற்றப்பட்டது. அதற்கு முன்பாக யூதருக்குப் பயந்து மேல்வீட்டறையிலே மறைந்திருந்த அவர்கள் தெய்வீக பெலத்தால் நிறைந்து ஆவியிலே வைராக்கியம்கொண்டு சிங்கத்தைப்போல பிரசங்கித்தார்கள்.
‘நசரேயனாகிய இயேசுவை நீங்கள் கொலை செய்தீர்கள். தேவன் அவரை எழுப்பினார். அதற்கு நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம்’ என்று முழங்கினார்கள். ஆவியானவருடைய உன்னத பெலன் அவர்களுடைய உள்ளான மனுஷனை நிரப்பியிருந்ததே அதன் காரணம். அந்த பெலன் அவர்களுடைய பயம், கோழைத்தனம், எல்லாவற்றையும் நீக்கிப்போட்டுவிட்டது.
சிம்சோனின் பெலத்தின் இரகசியம் என்ன என்று தெலீலாள் கேட்டபோது, அவர் தன்னுடைய பெலத்தின் இரகசியம் தன் தலைமுடியில் இருப்பதாக அறிவித்தார். தலைமுடி சிரைக்கப்பட்டபோது பெலன் அவரைவிட்டு நீங்கிற்று. ஆனால், அவர் தன்னுடைய பெலன் பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து இறங்கி வருகிறது என்று சொல்லியிருந்திருப்பாரானால், தெலீலாளால் அவரை ஒன்றும் செய்திருக்க முடியாது.
உண்மையில் சிம்சோனுடைய பெலன் தலைமுடியிலிருந்தல்ல. பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்தே வந்தது. பிரதிஷ்டையின் ஜீவியத்திலிருந்து வந்தது. அந்த ஆவியானவரைச் சார்ந்துகொள்ளாததால் பெலன் அவரைவிட்டு எடுபட வேண்டியதாயிற்று.
தேவபிள்ளைகளே, உங்களுடைய பெலத்தை ஆவியானவர் மேலேயே வையுங்கள். உங்கள் பெலனாகிய கர்த்தரை எப்பொழுதும் ஸ்தோத்திரம் செய்யுங்கள். ‘நீரே என் பெலனாய் இருக்கிறீர், ஆண்டவரே’ என்று சொல்லி அவரைச் சார்ந்துகொள்ளுங்கள். அப்பொழுது எந்த வல்லமையும் உங்களை மேற்கொள்ள முடியாது. “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13) என்று முழங்கிச் சொல்லுவீர்கள்.
நினைவிற்கு:- “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியை கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோ. 1:7).