bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

மே 26 – தேவ பிரசன்னமும், வேத தியானமும்!

“நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்” (சங். 46:10).

நீங்கள் அமர்ந்திருந்து கர்த்தருடைய வார்த்தைகளை தியானம்பண்ணும்போது, பரலோகத்திலிருந்து வருகிற நதிபோல தேவ பிரசன்னம் உங்களுடைய இருதயத்தில் இறங்கி, அதை நிரப்பி, பூரிப்பாக்கிவிடும். வாசித்த வேத வசனங்களை உங்களுடைய நினைவுக்கு கொண்டுவாருங்கள். அதை ஆராய்ந்துபார்த்து தியானியுங்கள், சிந்தனை செய்யுங்கள். வாசித்த வேதப்பகுதியில் உள்ள சத்தியங்களை உங்கள் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்துபவராக நடந்துகொள்ளவேண்டும் என்று மன்றாடி ஜெபியுங்கள். அதன் மூலமாக தேவ பிரசன்னத்தை மட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுவீர்கள்.

கானானை ஜெயிக்கவும், அதனை சுதந்தரிக்கவும் கர்த்தர் யோசுவாவை தெரிந்துகொண்டபோது, யோசுவா தேவ பிரசன்னத்தை நாடி ஜெபித்தார். ஆகவேதான் கர்த்தர், “நான் மோசேயோடே இருந்ததுபோல உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை” (யோசுவா. 1:5) என்று சொல்லி, முதலாவது தமது பிரசன்னத்தினை வாக்களித்தார்.

பின்பு யோசுவாவிடம் “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதை தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துக்கொள்ளுவாய்” (யோசுவா 1:8) என்று சொன்னார்.

நீங்கள் வேதத்தை வாசிப்பீர்கள், படிப்பீர்கள், மனப்பாடமும் செய்வீர்கள். ஆனால், வேதத்தை தியானிக்கிறீர்களா என்பதே மிகவும் முக்கியமானதாயிருக்கிறது. தியானிக்கும்போதுதான் தேவனுடைய வல்லமை உங்களுடைய ஆத்துமாவை பலப்படுத்தும். வெறுமனே வாசிப்பது பிரயோஜனமாயிராது. தியானிப்பதே உங்களுக்குள் வசனத்தின் வல்லமை கிரியை செய்ய வழிவகுக்கும்.

தியானிப்பது என்றால் என்ன? ஆடு, மாடு, ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி போன்றவைகளுக்கு ஒரு விசேஷ சுபாவம் உண்டு. அவைகள் அமைதியான ஒரு இடம் தேடி அமர்ந்த பின்பு, தாங்கள் அதுவரை மேய்ந்திருந்த உணவை அசைபோட்டு ருசிக்க ஆரம்பிக்கும். மேய்ந்ததை அசைபோடும் அந்த சுபாவமே கிறிஸ்தவ மார்க்கத்தில் தியானத்திற்கு ஒப்பாயிருக்கிறது.

தாவீது ஒரு தியான புருஷன். ஆகவே, அவர், “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங். 1:2) என்று எழுதியதுடன், தானே அந்த பாக்கியமான அனுபவத்திற்குள் கடந்துவந்தார். “என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்” (சங். 63:6) என்றார்.

தேவபிள்ளைகளே, வாசித்த வேத பகுதியை நினைவுக்குக் கொண்டுவந்து, அதை சிந்தனை செய்து, அதில் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன என்பதையும் எச்சரிக்கை என்ன என்பதையும் ஆசீர்வாதம் என்ன என்பதையும் தியானியுங்கள். அந்த வசனங்களின் ஆழங்களை ருசி பார்த்து, அதை அனுபவமாக்கிக்கொள்ளுவதே தியானத்தின் முதலும் முக்கியமானதுமான பலன் ஆகும்.

நினைவிற்கு:- “என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக” (சங். 19:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.