No products in the cart.
மே 14 – கீர்த்தியும், புகழ்ச்சியும்!
“பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (செப். 3:20).
“உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைப்பேன்” என்பதே கர்த்தர் இன்று உங்களுக்குக் கொடுக்கும் வைராக்கியமான வாக்குத்தத்தம். ஜனங்கள் உங்களுடைய பெயருக்கு அவகீர்த்தி உண்டுபண்ண நினைக்கலாம். உங்களைத் தூற்றித் திரியலாம். ஆனால், கர்த்தர் உங்களுடைய பட்சத்தில் இருக்கிறபடியினால் அவர் சத்துருவினுடைய சதி ஆலோசனைகளையெல்லாம் நிர்மூலமாக்கி, நிச்சயமாகவே உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் வைப்பார்.
சில வருடங்களுக்கு முன்பு, ஒரு அன்றன்றுள்ள அப்பம் குடும்பத்தினர், “நாங்கள் வெறுங்கையாக சென்னைப் பட்டணத்திற்கு வந்தோம். வறுமை எங்களை மிகவும் வாட்டியது. வீட்டு வாடகைகூட தர முடியாமல் மகா வேதனைப்பட்டோம். எங்களிடம் இருந்ததெல்லாம் ஜெபம், ஜெபம் ஜெபம் மட்டும்தான்.
நாங்கள் கர்த்தரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு, விடாப்பிடியாக ஜெபித்து ஒரு தொழிலை ஆரம்பித்தோம். கர்த்தர் அந்த தொழிலை மகா மேன்மையாய் ஆசீர்வதித்தார். எங்கள் உறவினர் மத்தியிலே கீர்த்தியும் புகழ்ச்சியுமாய் எங்களை வைத்தார். நாங்கள் மேன்மையாய் உயர்த்தப்படுவதற்கு உங்கள் தந்தையின் ஆவிக்குரிய புத்தகங்களும் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாய் இருந்தன” என்றார்கள்.
அவர்களுடைய வீட்டுச் சுவரிலே, “உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்” (செப்பனியா 3:20) என்ற வாக்குத்தத்தம் பெரியதாக எழுதப்பட்டிருந்தது. ஆம், கர்த்தர் வாக்களித்தபடியே அவர்களை ஆவிக்குரியபிரகாரமாகவும், உலகப்பிரகாரமாகவும் மகா மேன்மையான இடத்திலே வைத்தார்.
கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து உன் பேரை பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” என்று சொன்னார் (ஆதி. 12:2). கர்த்தர் சொன்னபடியே ஆபிரகாமை ஆசீர்வதித்தார். ஆபிரகாமுக்கு உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களும் இருந்தன. ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் இருந்தன. உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்களும் இருந்தன. நித்தியமான ஆசீர்வாதங்களும் இருந்தன.
யூதர்களும், இஸ்ரவேலரும் ஆபிரகாமை தங்களுடைய பிதா என்று அழைக்கிறார்கள். இவர் முற்பிதாக்களிலே மூத்தவரும், விசேஷமுமானவர். இஸ்லாமியர்கள் ஆபிரகாமை “இப்ராகீம் நபி” என்றும் “பெரிய தீர்க்கதரிசி” என்றும் சொல்கிறார்கள்.
புதிய ஏற்பாட்டிலும் இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு பற்றி மத். 1:1-ல் சொல்லும்போது, “ஆபிரகாமின் குமாரனும் தாவீதின் குமாரனுமாகிய இயேசுகிறிஸ்துவின் வம்ச வரலாறு” என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர் விசுவாசிகளின் தகப்பன் என்றும், எபிரெயரின் பிதா என்றும் அழைக்கப்பட்டார். ஆம், உண்மையாகவே ஆபிரகாமினுடைய பெயரை கர்த்தர் பெருமைப்படுத்தினார். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களையும் இந்த பூமியிலே கீர்த்தியும், புகழ்ச்சியுமாக வைப்பார்.
நினைவிற்கு:- “ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்” (1 நாளா. 29:12).