No products in the cart.
டிசம்பர் 20 – எங்கே அவர்?
“யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்” (மத். 2:2).
இயேசுவைப் பணிந்துகொள்ள கிழக்கிலிருந்து வந்தவர்களை ‘சாஸ்திரிகள்’ என்று தமிழ் வேதாகமம் கூறுகிறது. ஆங்கில வேதாகமமோ ஞானிகள் என்று அழைக்கிறது. ஞானமுள்ள சாஸ்திரிகள் அன்றைக்கும் இயேசுவைத் தேடினார்கள். இன்றைக்கும் இயேசுவைத் தேடுகிறார்கள்.
கர்த்தரைத் தேடுவதுதான் ஞானிகளின் செயல். கிறிஸ்துவானவர் ஞானத்தின் ஊற்று அல்லவா? அவரிடத்திலிருந்துதானே அறிவு புறப்பட்டு வருகிறது? பழைய ஏற்பாட்டில் ஞானி சாலொமோன் சொல்கிறார், “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்” (நீதி. 1:7).
அன்று ஞானிகளாகிய சாஸ்திரிகள் இயேசுவைத்தேடினார்கள். இன்று நீங்கள் ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவீர்களாகில் கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீங்கள் உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவீர்கள் (நீதி. 2:3,4,5).
கிறிஸ்து பிறந்தபோது அந்த ஞானிகள் எந்த தேசத்திலிருந்து வந்தார்கள் என்று நமக்கு திட்டவட்டமாய்த் தெரியவில்லை. கிழக்கிலிருந்து வந்தார்கள் என்பதினால் கிழக்கே இருக்கிற இந்தியாவிலிருந்து வந்திருக்கக்கூடும் என்று பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். இன்னும் சிலரோ, சீன தேசத்திலிருந்து வந்திருக்கக்கூடும் என்று எண்ணுகிறார்கள்.
எங்கே இருந்து வந்தார்கள் என்று நமக்கு திட்டமாய்த் தெரியாமலிருந்தாலும் மிகப் பெரிய இராஜாவைத் தேடவேண்டும். அவரைக் கண்டுபிடிக்கவேண்டுமென்ற ஆர்வம் அவர்களுக்குள் இருந்ததை நாம் காணமுடிகிறது. கிறிஸ்துவைக் காணவேண்டுமென்ற ஆர்வம் உங்களுக்குள் இருக்கிறதா? அவரைத் தேடுவீர்களா? வேதம் சொல்லுகிறது, “உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்” (உபா. 4:29).
“அவரைக் கண்டடைவாய்” என்பது தேவனுடைய வாக்குத்தத்தம். அன்று சாஸ்திரிகள் தங்கள் மாம்சீக எண்ணத்தினால் இயேசுவைத் தவறான இடத்தில் தேடினார்கள். ஏரோதின் அரண்மனையிலே போய் தேடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களுடைய உள்ளம் உண்மையாகவே கிறிஸ்துவைக் காணவேண்டுமென்று வாஞ்சித்துக் கொண்டிருந்தபடியினாலே, கர்த்தர் அவர்களை அருமையாய் வழிநடத்தி பெத்லகேமுக்குக் கொண்டுசென்றார். அவர்கள் இயேசுவைக் கண்டடைந்தார்கள். அவரைப் பணிந்துகொண்டார்கள்.
ஞானிகளாகிய சாஸ்திரிகள் அன்று இயேசுவைத் தேடிக் கண்டுபிடித்ததைப்போல நீங்களும் கிறிஸ்துவைக் காண்பீர்கள். இயேசுவைக் காண்பது ஏதோ ஒரு நாளின் அனுபவமாக அல்லாமல், ஒவ்வொரு நாளின் அனுபவமாக இருக்கட்டும். “அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்” என்று சங்கீதக்காரர் நமக்கு ஆலோசனைக் கூறுகிறார் (சங். 105:4). தேவபிள்ளைகளே, எல்லா நாட்களிலும் கர்த்தரைத்தேட மறந்துவிடாதேயுங்கள். நீங்கள் உண்மையாய் அவரைத் தேடும்போது நிச்சயமாகவே அவர் உங்களுக்கு வெளிப்படுவார்.
நினைவிற்கு:- “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்” (ஏசாயா 55:6).
