Appam, Appam - Tamil

ஆகஸ்ட் 20 – பலத்தால் இடைக்கட்டி!

“என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே” (சங். 18:32).

தேவ பெலத்தால் உங்களை இடைகட்டிக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் அரிய பெரிய காரியங்களை கர்த்தருக்காகச் செய்து முடிக்கமுடியும். வயதான நாட்களிலே, தன்னை தேவ பெலத்தால் இடைகட்டி மலைநாட்டை சுதந்தரித்துக்கொண்ட காலேபின் வாழ்க்கை நம்மை ஆச்சரியப்படவைக்கிறது. அதுபோல கிதியோன் தனக்கு இருந்த பெலன் கொஞ்சமாயிருந்தாலும் கர்த்தருடைய பிரசன்னத்தோடு யுத்தத்திற்குச் சென்று மீதியானியரை மேற்கொண்ட சம்பவம் நம்மை தேவ பெலத்தால் இடைகட்டுகிறது.

தாவீதின் அனுபவம் என்ன? ஒரு பக்கம், அவர் யுத்தத்திற்காக பெலன்கொண்டார். மறுபக்கம், கர்த்தரை ஆராதிப்பதற்காக பெலன்கொண்டார். ஆடுகளை மேய்த்த தாவீது உன்னத பெலத்தால் தன்னை இடைகட்டிக்கொண்டிருந்தபடியால், ஆடுகளுக்கு விரோதமாய் வந்த கரடியையும், சிங்கத்தையும் அடித்து வீழ்த்தினார். கோலியாத்தின்மேல் ஜெயங்கொண்டார். நூற்றுக்கணக்கான இராஜாக்களோடு யுத்தம் செய்து ஜெயத்தைச் சுதந்தரித்தார். அந்தக் கர்த்தர் உங்களையும் தன்னுடைய பெலத்தால் இடைகட்டுவார். வேத வசனங்களால் இடைகட்டுவார், வரங்களினாலும், வல்லமையினாலும் இடைகட்டுவார்.

“என்னைப் பெலத்தால் இடைகட்டுகிறவர்” (சங். 18:32) என்று எழுதுகிற தாவீது 39 ஆம் வசனத்திலே ‘யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி’ என்று குறிப்பிடுகிறார். யுத்த வீரர்கள் யுத்தத்திற்கு படையெடுத்துச் செல்லுவதற்கு முன்பாக தங்களுடைய அரையை உறுதியாய் கட்டிக்கொள்வார்கள். ஒரு மனிதனுடைய முழு பெலமும் அவனது இடுப்பையே மையமாகக்கொண்டுள்ளது.

இயேசு சொன்னார், “உங்களுடைய அரைகள் கட்டப்பட்டதாக …. இருங்கள்” (லூக். 12: 35,36). அப். பவுல், சத்தியம் என்னும் கச்சையினால் உங்களுடைய அரைகள் கட்டப்பட்டதாக இருக்கட்டும் (எபே. 6:14) என்று எழுதுகிறார். அப். பேதுரு, உங்களுடைய மனதின் அரைகள் கட்டப்பட்டதாய் இருக்கட்டும் (1 பேது.1:13) என்று குறிப்பிடுகிறார்.

கர்த்தர் தாவீதைக்கொண்டு இஸ்ரவேல் தேசத்தின் எல்லைகளெல்லாம் விரிவாகும்படிச் செய்தார். பெலிஸ்தியருக்கு விரோதமான யுத்தம், அமலேக்கியருக்கு விரோதமான யுத்தம் என்று தாவீதின் காலமெல்லாம் பெரும் யுத்தங்கள் நடந்துகொண்டேயிருந்தன. “தாவீது வரவரப் பலத்தான்” (2 சாமு. 3:1) என்று வேதம் சொல்லுகிறது. தாவீது பெலத்தின்மேல் பெலனடைந்ததினால் சாட்சியாக என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கடிக்கப்பண்ணினீர் என்றார் (சங். 18:39).

தேவபிள்ளைகளே, நீங்கள் ஒரு யுத்தக்களத்தில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். அதுவே ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை. உலகம், மாமிசம், பிசாசு ஆகியவை இடைவிடாமல் உங்களோடு யுத்தம் செய்துகொண்டேயிருக்கின்றன. கடைசி மூச்சு இருக்கும்வரைக்கும் இந்தப் போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதிகாலையில் கர்த்தர் சமுகத்தில் முழகாற்படியிட்டு ஜெபிப்பதும், வேத வசனங்களை தியானிப்பதுமே உங்களை ஜெயம்பெறச் செய்யும். பாவங்களை எதிர்த்து நிற்பதில் இரத்தம் சிந்தத்தக்கதாக நீங்கள் போராடுவதற்கு ஆவிக்குரிய பெலன் மிகவும் அவசியம்.

நினைவிற்கு:- “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்” (ஆபகூக் 3:19).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.