No products in the cart.
ஆகஸ்ட் 19 – கனிதரும் திராட்சக்கொடி!
“உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்” (சங். 128:3).
இஸ்ரவேல் ஜனங்கள் மூன்றுவகைத் தாவரங்களை முக்கியப்படுத்துகிறார்கள். முதலாவது ஒலிவமரம். இது அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறிக்கிறது. இரண்டாவது, அத்திமரம். அது அவர்களுடைய அரசியல் வாழ்க்கையைக் குறிக்கிறது. மூன்றாவது, திராட்சக்கொடி. அது அவர்களுடைய குடும்ப வாழ்க்கையைக் குறிக்கிறது.
இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் வீட்டின் முற்றத்திலே திராட்சக்கொடியை வளர்ப்பார்கள். அந்தப் பந்தலிலே கொடியானது அருமையான கனிகளைக் கொடுத்து அவர்களை மகிழ்விக்கும். அவர்கள் வெயிலின் உஷ்ண நேரத்திலே திராட்சக்கொடியின் நிழலிலே அமர்ந்திருப்பார்கள்.
துவக்கத்திலே சொன்ன வசனத்திலே, “உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப் போலிருப்பாள்” என்று சொல்லி, கர்த்தர் மனைவியானவள் ஆசீர்வாதமான குடும்பத்தின் அடையாளம் என்பதைத் தெரியப்படுத்துகிறார். வீட்டோரங்களில் என்ற வார்த்தையை புதிய ஆங்கில வேதாகமத்தில் ‘வீட்டின் மத்தியில்’ என்றும், திருத்திய ஆங்கில மொழி அகராதியில் ‘வீட்டின் உட்பிரகாரத்தில்’ என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
மனைவி வீட்டின் உள்ளும், வெளியேயும் அவள் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் கனிதரும் திராட்சக்கொடியாக இருந்து மகிழ்விக்கிறாள். மனைவியின் முதல் பொறுப்பு அவள் இல்லறத்துக்குள்ளே இருக்கிறது. கணவனை கவனித்துக்கொண்டு, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் பெரும்பணியை அவள் மேற்கொள்ளுகிறாள். அதுவே அவளுடைய பிள்ளைகள் பிற்காலத்தில் சிறந்து விளங்குவதற்கு வழி வகுக்கிறது.
ஒரு சிறு பெண்குழந்தை தான் விரும்பினதை தன்னுடைய தாய் தனக்குக் கொடுக்க மறுத்து எரிச்சலுற்றதால் மனம் மடிவானாள். அன்று இரவு அவள் ஜெபிக்கும்போது, “ஆண்டவரே தயவுசெய்து இனிமேல் என்னுடைய பெற்றோருக்கு குழந்தைகளைக் கொடுக்காமல் இரும். ஏற்கனவே இருக்கும் குழந்தைகளையே எப்படி நடத்தவேண்டுமென்று அவர்களுக்குத் தெரியவில்லை” என்று உள்ளம் உருகி ஜெபித்தாளாம். பிள்ளைகள் குழந்தைகளாய் இருக்கும்போது அவர்களை சரியாகப் பராமரிக்கத் தவறுவது அவர்கள் வாலிபப்பருவத்தை அடையும்போது தொல்லையாகிய அறுவடையைத்தான் தரும்.
மனைவியை கனிதரும் திராட்சக்கொடிக்கு வேதம் ஒப்பிடுவதால், மனைவியின் மேன்மை எப்படிப்பட்டது என்பது வெளிப்படுகிறது. திராட்சக்கொடியானது வீட்டின் எல்லையெங்கும் படர்ந்து திரியும். அதுபோலவே குடும்பத்தின் பெண்ணுக்கு பிள்ளைகளை வளர்ப்பது மட்டுமல்லாமல், இனத்தவர்களை உபசரிப்பது, வீட்டுக்கு வரும் விருந்தினரைப் பராமரிப்பது போன்ற பல கடமைகள் உள்ளன. விருந்தோம்பும் பண்பு பெண்களுக்கு உரிய ஈடுஇணையற்ற சிறப்புப் பண்பாகும். நீங்கள் உங்கள் வீட்டிற்கு வருகிறவர்களை இன்முகத்துடன் வரவேற்று கர்த்தரிடத்தில் வழிநடத்தவேண்டியது உங்கள்மேல் விழுந்த கடமை அல்லவா? உங்கள் குடும்பம் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமாய் இருக்கிறதா? மாற்றங்களைக் கொண்டுவரவேண்டியுள்ளதா? தேவபிள்ளைகளே, உங்களுடைய குடும்பம் ஆசீர்வாதமான குடும்பமாக விளங்கட்டும்.
நினைவிற்கு:- “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” (சங். 127:4).