No products in the cart.
ஆகஸ்ட் 18 – முடிசூட்டி!
“மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்” (சங். 8:4,5).
நம்முடைய அருமை ஆண்டவர் அண்ட சராசரங்களையும் உண்டாக்கினவர். சகல அதிகாரமும் ஆளுகையும் உள்ளவர். “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று அவர் அதிகாரத்தோடும், வல்லமையோடும் சொன்னவுடனேயே வெளிச்சம் உண்டானது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் அவ்வாறே சிருஷ்டிக்கப்பட்டன.
கர்த்தர் தன்னுடைய அதிகாரத்தையும், ஆளுகையையும் மனுஷனுக்குக் கொடுக்க விரும்பினார். ஆகவேதான் தன்னுடைய ரூபத்திலே மனுஷனை உண்டாக்கினார். “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” (ஆதி. 1:28) என்று அதிகாரத்தையும் கொடுத்தார்.
சங்கீதக்காரர் சொல்லுகிறார், “உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்” (சங். 8:6). “உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர்” (சங். 21:5). “மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்” (சங். 8:5). “கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, …திருப்பதியாக்குகிறார்” (சங். 103:4,5).
கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த ஆளுகையின் மேன்மை என்ன என்பதை ஆதாமும், ஏவாளும் அறிந்திருக்கவில்லை. கனமும், மகிமையும் என்ன என்பதை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. சாத்தானுடைய தந்திரத்தினால் வஞ்சிக்கப்பட்டு பாவம் செய்தார்கள். கீழ்ப்படியாமல் போனார்கள்.
ஆனாலும்கூட கர்த்தர் மனிதன்மேல் தொடர்ந்து அன்பு செலுத்தினார். அவன் ஏதேனில் இழந்துபோன கனத்தையும் மகிமையையும் மீண்டும் அவனுக்குத் தரவேண்டும் என்று ஆவல்கொண்டு கல்வாரிச் சிலுவையில் பாடுபட்டார். தன்னுடைய மரணத்தினால் மரணத்தின் அதிபதியாகிய பிசாசானவனை ஜெயித்தார். மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோலை உடையவராயிருக்கிறார். இன்று அவர் உங்களுக்கு மீண்டும் அதிகாரத்தையும் ஆளுகைகளையும் தர விரும்புகிறார். பரலோக ராஜ்யத்தின் திறவுகோலைத் தர விரும்புகிறார்.
“பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்” (மத்.16:19) என்று வாக்களித்திருக்கிறார்.
தேவபிள்ளைகளே, உங்களுக்குக் கர்த்தர் தருகிற அதிகாரங்களையும், வல்லமைகளையும் அறிந்துகொள்ளுங்கள். உங்களைக் கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். தேவனுடைய அபிஷேகத்தை ஒருபோதும் நஷ்டப்படுத்திவிடாதிருங்கள். வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை வாழுங்கள். பரிசுத்தத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை கிருபையினாலும், இரக்கங்களினாலும் முடிசூட்டுவார்.
நினைவிற்கு:- “அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” (என்றார்) (மத். 28:18).