Appam, Appam - Tamil

ஆகஸ்ட் 17 – கனிதரும் செடி!

“யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்” (ஆதி. 49:22).

யாக்கோபு தன் முதிர்வயதான நாட்களில் தன்னுடைய பன்னிரண்டு குமாரர்களையும் அழைத்து அவர்களை மனப்பூர்வமாய் ஆசீர்வதித்தார். அந்த ஆசீர்வாதமான வார்த்தைகள் அவரிடமிருந்து தீர்க்கதரிசனங்களாய் வெளிவந்தன. அந்த தீர்க்கதரிசனங்கள் அவர்களையும், அவர்களுடைய சந்ததிகளையும்பற்றியதாய் விளங்கியது. மேலே உள்ள வசனம் யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்பை ஆசீர்வதிக்கும்போது கூறிய வார்த்தைகளாகும்.

யோசேப்பினுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தைப் பார்ப்பீர்களென்றால் அவருடைய வாழ்க்கை எவ்வளவு துயரத்தோடு ஆரம்பித்தது என்பதை அறியலாம். யோசேப்பினுடைய தாய் அவருக்கு “பெருகுவாய்” என்ற அர்த்தம் உடைய யோசேப்பு என்ற பெயரைச் சூட்டினாள். “என் மகனே, நீ பெருக வேண்டும். உன் எல்லைகள் விரிவடைய வேண்டும்” என்பதே அந்த தாயின் வாஞ்சையாய் இருந்தது.

பல ஆண்டுகள் அவளுக்கு குழந்தை இல்லாமலிருந்த சூழ்நிலையில் யோசேப்பு பிறந்ததினால் அவள் யோசேப்பின் மேல் அளவற்ற அன்பு வைத்திருந்தாள். ஆனால் அந்தோ! யோசேப்பு சிறுவனாய் இருந்தபோதே அவள் இறந்துபோனாள். தாயின் அன்பை இளம்வயதில் இழப்பது எத்தனை வேதனையானது! தாயை எண்ணி யோசேப்பு எப்போதும் மனம்கசந்து அழுதுகொண்டிருந்திருப்பார்.

மாத்திரமல்ல, யோசேப்பினுடைய சகோதரர்களெல்லாம் அவனை மிகவும் பகைத்தார்கள். அவர்கள் சொல்லிமுடியாத கஷ்டங்களை யோசேப்புக்குக் கொடுத்தார்கள். அவர்களது பொறாமைக்கு அளவேயில்லை. இறுதியில் அவரை எகிப்தை நோக்கிச்சென்ற வணிகக்கூட்டத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் எல்லாப்பக்கமும் அனாதைபோல் நிற்க வேண்டியிருந்தது. ஆனாலும் நம் அருமை ஆண்டவர் எல்ஷடாயாய் மனமிரங்கினார். அவர் தாயற்ற அனாதைக் குழந்தைகளுக்கு தாய்போல தம் அன்பைக் காண்பிக்கிறவர். தகப்பனுடைய அன்பு கிடைக்காத சூழ்நிலையில் தகப்பனாக விளங்குகிறவர். சொந்த சகோதரனைக் காட்டிலும் அதிகமாய் அன்பு செலுத்துகிறவர்.

கர்த்தர் யோசேப்பை கைவிடவேயில்லை. கனி தரும் செடியாய் அவரை ஆசீர்வதிக்க விரும்பினார். இரவு நேரங்களில் எல்லாம் யோசேப்போடு உறவாட ஆரம்பித்தார். சொப்பனங்கள், தரிசனங்கள் மூலமாய் யோசேப்போடு தொடர்ந்து பேசினார். ஒருநாள் யோசேப்பு, சூரியனும், சந்திரனும் பதினோரு நட்சத்திரங்களும் தன்னை வணங்குவதாக சொப்பனம் கண்டார்.

இன்னொரு முறை, யோசேப்பு அறுத்துக்கொண்டுவந்த அரிக்கட்டு தலைநிமிர்ந்து நிற்கிறதையும், அவனுடைய சகோதரர்கள் கொண்டுவந்த அரிக்கட்டுகள் யோசேப்பின் அரிக்கட்டை வணங்கி நின்றதையும் யோசேப்பு தரிசனத்தில் கண்டார். கர்த்தர் மனதுருக்கத்தோடு இனிமையான சொப்பனங்களினால் யோசேப்பை ஆற்றித் தேற்றினார். தேவபிள்ளைகளே, இன்றைக்குக் கர்த்தர் உங்களையும் ஆற்றித்தேற்றி, ஆசீர்வதிக்க விரும்புகிறார். கனி தரும் திராட்சச்செடியாய் உங்களை நிலைநிறுத்த தீர்மானித்திருக்கிறார். கர்த்தர் உங்களை கனிதரும்செடியாய் நாட்டியிருக்கிறபடியினாலே கர்த்தருக்கு நன்றியோடு ஸ்தோத்திரம் செலுத்துவீர்களாக.

நினைவிற்கு:- “அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்” (வெளி. 22:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.