No products in the cart.
ஜூலை 29 – ஸ்தோத்திர பலியிடுகிறவன்!
“ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்” (சங்.50:23).
இந்த சங்கீதம் ஆசாபின் சங்கீதம் என்று அழைக்கப்படுகிறது. தாவீதின் தேர்ச்சிபெற்ற இசைக்குழுவினரில் ஒருவராக ஆசாப் விளங்கினார். ஆசாப் பஞ்சலோகக் கைத்தாளங்களை தொனிக்கப்பண்ணி சிறப்பாகப் பாடுகிற தாலந்தைப் பெற்றிருந்தார் (1 நாளா. 15:19). அது மட்டுமல்லாமல், அவர் ஒரு ஞானதிருஷ்டிக்காரன் என்றும், அநேக பாடல்களை இயற்றினார் என்றும் 2 நாளா. 29:30 சொல்லுகிறது.
அவர் தன்னுடைய வாழ்க்கையிலே கர்த்தரைத் துதித்ததின்மூலம் கண்டுபிடித்த பெரிய தேவ இரகசியம், ஸ்தோத்திர பலியிடுகிறவன் கர்த்தரை மகிமைப்படுத்துகிறான் என்பதாகும் (சங். 50:23). ஆபிரகாம் தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவரானார் (ரோமர் 4:21). கர்த்தரைத் துதிக்கும்போது துதிகளின் மத்தியிலே வாசம்பண்ணுகிறவர் அங்கே இறங்கி வருகிறார். தேவ சமுகமும், தேவ பிரசன்னமும், தேவ மகிமையும் அங்கே வருகிறது. அதை தாவீது ருசித்ததினால்தான் ஒரு நாளில் ஏழுதரம் கர்த்தரைத் துதிக்கிறேன் என்றார் (சங். 119:164).
இந்த பூமிக்குரிய கொஞ்சகால வாழ்க்கையில் கர்த்தரை மகிமைப்படுத்துவதே உங்களுடைய வாழ்க்கையின் நோக்கமாக இருக்கட்டும். கர்த்தரைக்குறித்து சாட்சி கொடுப்பதினால் அவர் மகிமைப்படுகிறார். முன்மாதிரியாக மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது, உங்களுடைய நற்கிரியைகளினால் கர்த்தர் மகிமைப்படுகிறார்.
அதே நேரம் வேதம் ஒரு எச்சரிப்பைக் கொடுக்கிறது. ஜனங்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது (ரோமர் 1:21). அநேகருடைய உள்ளம் மட்டுமல்ல, அவர்களது குடும்பமும், வாழ்க்கையும்கூட துதியாததினால் இருளடைந்து போயிருக்கின்றன.
ஆனால் உங்களுடைய வீடு ஒளிமயமாக இருக்கவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். தேவனுடைய மகிமை உங்களுடைய வீட்டில் தங்கியிருக்கட்டும். தேவதூதர்கள் இறங்கி உலாவட்டும். ஒரு ஜெப பிரசன்னம் உங்கள் வீட்டில் நிறைவாயிருந்து கர்த்தரைத் துதிப்பதற்கு உங்களை ஏவி எழுப்பட்டும். கர்த்தரை எக்காலத்திலும் ஸ்தோத்திரிக்கத் தீர்மானம் செய்யுங்கள்.
நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, ஜெபத்திற்கு பதில் வருவதற்கு முன்பாகவே தேவனைத் துதித்து ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தார். லாசருவின் கல்லறையண்டை நின்று ‘பிதாவே நீர் எனக்கு செவிகொடுத்தபடியினால் உம்மைத் துதிக்கிறேன்’ என்று முதலாவது தேவனை ஸ்தோத்திரித்து மகிமைப்படுத்தி, பின்பு ‘லாசருவே வெளியே வா’ என்று கட்டளையிட்டார். அவர் கட்டளையிட்டபடி லாசரு உயிருடன் வெளியே வந்தான்.
தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையிலும் துதி ஸ்தோத்திரம், ஆராதனை ஆகியவை முக்கிய இடம் வகிக்கட்டும். ஸ்தோத்திரத்தினால் உலர்ந்த எலும்புகளும் உயிர்ப்பிக்கப்படும்.
நினைவிற்கு:- “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலி.4:6, 7).