No products in the cart.
ஜூலை 28 – எளிமையுள்ளவன்!
“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது” (மத். 5:3).
ஆவியில் எளிமையுள்ளவர்களாய் இருப்பதன்மூலம் பரலோக இராஜ்யத்தையே சுதந்தரித்துக்கொள்ள முடியும் என்பது எவ்வளவு பெரிதான ஒரு ஆசீர்வாதம்!
லூக்கா 18-ம் அதிகாரத்தில் ஆலயத்துக்கு ஜெபிக்கச்சென்ற ஒரு பரிசேயனைப்பற்றியும், ஒரு ஆயக்காரனைப்பற்றியும் வாசிக்கிறோம். பரிசேயர்கள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டவர்களாகவும், சமயப்பற்றுள்ளவர்களாகவும் கருதப்பட்டார்கள். ஆயக்காரர்களோ ரோம அரசாங்கத்துக்கு வரி வசூலிப்பவர்களாக இருந்தார்கள். இவர்கள் பாவிகளாகவும், துரோகிகளாகவும் கருதப்பட்டார்கள்.
பரிசேயன் ஜெபிக்கும்போது தான் உத்தமன் என்றும், வாரத்தில் இரண்டு நாள் உபவாசிப்பதாகவும், தவறாமல் தசமபாகம் தருவதாகவும் கூறினான். இவனது ஜெபத்தில் அவனைக்குறித்த பெருமையும், அகங்காரமுமே மேலோங்கியிருந்தது. கர்த்தர் நம்மிடம் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கும் குணாதிசயமான தாழ்மை அவனிடத்தில் சிறிதளவும் இல்லை என்பதை அவனது ஜெபம் வெளிப்படுத்தியது. ஆனால் ஆயக்காரனோ தூரத்திலே நின்று தன் கண்களையும் வானத்துக்கு நேராக ஏறெடுக்கத் துணியாமல் தன் மார்பிலே அடித்துக்கொண்டு ‘தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்’ என்று சொல்லி ஜெபித்தான். அவனது தாழ்மையைக் கண்ட கர்த்தர் அவனையே நீதிமானாக்கப்பட்டவனாய் வீடு திரும்பச் செய்தார்.
எளிமையை வலியுறுத்தும் கர்த்தர் முழுப் பரலோகராஜ்யத்தையும், நித்திய பாக்கியமான வாழ்வையும் உங்கள்முன் வைக்கிறார். பரலோக இராஜ்யத்தின் சந்தோஷத்தையும், ஜீவ கனிகளையும், ஜீவ கிரீடங்களையும் காண்பிக்கிறார். மகனே, இந்த பூமியில் நீ ஆவியிலே எளிமையுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வாயானால், முழுப் பரலோக இராஜ்யமும் உன்னுடையதுதான் என்று சொல்லுகிறார். இந்த கொஞ்சகால வாழ்க்கையில் ஆவியில் எளிமையுள்ளவனாய் வாழ்ந்தால் உங்களுக்கு நித்திய நித்தியமான பெரிய ஆசீர்வாதங்களை கர்த்தர் வைத்திருக்கிறார். பூமியிலே கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படும்போது அவர் உங்களைப் பரலோக இராஜ்யம்வரை உயர்த்துவார் (யாக். 4:10).
நீங்கள் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிக்க தானதருமங்களைச் செய்யவேண்டும் என்றும், நல்லவர்களாய் வாழவேண்டும் என்றும், உபவாசிக்கவேண்டும் என்றும் எண்ணிக்கொள்ளுகிறீர்கள். அது உண்மைதான் என்றாலும் பரலோக இராஜ்யத்திற்காக நீங்கள் உபயோகிக்கவேண்டிய முதல் திறவுகோல் ஆவியில் எளிமை என்பதாகும். சிறு பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் (மத். 18:14) என்று இயேசு சொன்னார்.
இந்த சமுதாயம் ஆவியில் எளிமையுள்ளவர்களை ஒருவேளை பரியாசம் செய்யலாம். ஆனால் பரலோக இராஜ்யம் எனக்கே சொந்தமானது என்கிற நிச்சயம் உங்களுக்கு உண்டு. கர்த்தர் பெருமையுள்ளவர்களை எதிர்த்து நிற்கிறார் என்பதையும், தாழ்மையுள்ளவர்களுக்கே கிருபையளிக்கிறார் (யாக். 4:6) என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்…எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலி. 2:9, 10, 11).