Appam, Appam - Tamil

ஜூன் 04 – வியாதியில் ஆறுதல்!

“இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு; எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்” (மத். 8:3).

வியாதியால் அவதிப்படும் நேரங்கள் சஞ்சலமான நேரங்களாகும். வியாதியின் கொடுமை ஒருபக்கம் தாக்குகையில், சரீர பெலவீனம் இன்னொரு பக்கம் தாக்குகிறது. என்ன நடக்குமோ என்ற பயம் வேறு உள்ளத்தைப் பிழிகிறது. ஆனால் வியாதிப்படுக்கையின் நேரத்திலும் கர்த்தர் உங்களோடுகூட இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துபோய்விடக்கூடாது.

அவர் எல்லாவற்றையும் உங்களுடைய நன்மைக்காகவே செய்தருளுகிறவர். வேதம் சொல்லுகிறது, “தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28). வியாதி நேரங்களிலும்கூட உங்களுடைய அருகிலே அமர்ந்து, உங்களுடைய குறைகளை உணர்த்தி, அவைகளை நிவிர்த்தி செய்யக் கர்த்தர் உதவுகிறார். உங்களோடு பேசி உங்களை உற்சாகப்படுத்துகிறார். உங்களுக்கு சரீர ஓய்வு தந்து உங்களை ஆவியில் பெலன்கொள்ளச் செய்கிறார்.

அன்றைக்குக் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு உடன்படிக்கை செய்து, “எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” (யாத். 15:26) என்று கூறினார். அந்த அன்புள்ள ஆண்டவர்தாமே தம்முடைய வார்த்தையை அனுப்பி உங்களைக் குணமாக்குவார். தன்னுடைய காயப்பட்ட கரங்களால் உங்களைத் தொட்டு சுகமாக்குவார்.

கிறிஸ்துவின் கைகள் குஷ்டரோகிகளை குணமாக்கும் தைலமாய் இருந்தன. பேதுருவுடைய  மாமியின் ஜுரத்தை நீக்கும் மாமருந்தாய் இருந்தன. கோணலான கரத்தை நேராக்கும் வல்லமையுள்ளதாய் இருந்தன. சிலுவையிலே நீட்டப்பட்டு, விரிந்த கரங்கள் இன்றைக்கும் தழும்புகள் உள்ளவைகளாகவே இருக்கின்றன.

அகதிகள் முகாம் ஒன்றில்  அரசாங்கம் ஒரு மருத்துவமனையைக் கட்டியது. அந்த ஆஸ்பத்திரிக்கு அருகிலேயே ஒரு சிறிய கிறிஸ்தவ மருத்துவமனை ஒன்றும் இருந்தது. ஆனால் ஜனங்களோ, அரசாங்க மருத்துவமனைக்குச் செல்லாமல், அருகிலுள்ள கிறிஸ்தவ மருத்துவமனைக்கே சென்று வைத்தியம் செய்துகொண்டார்கள்.

“இரண்டு இடங்களிலும் மருந்து ஒன்றுதான். சிகிச்சையும் ஒன்றுதான். ஆனால் கைகளில்தான் பெரிய வித்தியாசம். கிறிஸ்தவ மருத்துவமனையில்  மனதுருக்கத்தோடும், அன்போடும் சிகிச்சை தருகிறபடியினால், அந்தக் கரங்கள் எங்களை ஆறுதல்படுத்துகின்றன. அந்தக் கரங்களை நாங்கள் கிறிஸ்துவின் கரங்களாகவே காணுகிறோம். ஆகவே சுகத்தோடுகூட ஆறுதலையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்ளுகிறோம்” என்று மக்கள் தெரிவித்தார்கள்.

தேவபிள்ளைகளே, வியாதி நேரத்தில் பயப்பட்டு, வியாதி அதிகமாகிவிடுமோ, நான் மரித்துவிடுவேனோ என்றெல்லாம் ஒருபோதும் எண்ணிக் கலங்காதேயுங்கள். கர்த்தர் நிச்சயமாகவே தம்முடைய தழும்புகளுள்ள கரத்தை உங்கள்மேல் வைத்து உங்களுக்கு சுகத்தையும், பெலத்தையும், ஆரோக்கியத்தையும் கட்டளையிடுவார். அவரது ஆறுதல் நிச்சயம் உங்களுக்கு உண்டு.

நினைவிற்கு:- “அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1 பேதுரு 2:24).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.