Appam, Appam - Tamil

ஜூன் 03 – அதிர்ச்சியில் ஆறுதல்!

“நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப்பார். …உன் இருதயம் துவள வேண்டாம்” (ஏசா. 7:6).

நம்முடைய தேவன் அதிர்ச்சியான நேரங்களிலும் ஆறுதல் அளிக்கிறவர். பல எதிர்பாராத அதிர்ச்சியான செய்திகளைக் கேட்கும்போது, என்ன செய்வோம் என்று உள்ளம் அங்கலாய்க்கிறது. உள்ளம் கலக்கமடைகிறது. வேதனைப்படுகிறது. அப்போது கர்த்தர் மெல்லிய சத்தத்தில் பேசும் வார்த்தைகள் ‘நீ பயப்படாதே. அமர்ந்திரு. துவள வேண்டாம்’ என்பதாகும்.

முதலாவது ‘பயப்படாதே’ என்று கர்த்தர் சொல்லுகிறார். சாத்தான் ஒரு விசுவாசியின் உள்ளத்தில் விதைக்கும் முதல் விஷ விதை பயம்தான். முதலாவது அவன் பயத்தை உண்டாக்கி, பின்பு உள்ளத்தைக் கலங்க வைக்கிறான். முடிவில், தேவனிடத்திலே விசுவாசம் இல்லாதபடி செய்துவிடுகிறான்.

வேதத்தில் “பயப்படாதே” என்ற வார்த்தை 366 முறை வருகிறது. வருடத்தின் ஒவ்வொரு நாளுக்கும் இந்த வார்த்தை சொல்லப்படுவதாக இதைக் கொள்ளலாம். “உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவா. 14:27) என்றும், “நீ பயப்படாதே, நான் உனக்கு கேடகமும், உனக்கு மகாபெரிய பலனுமாயிருக்கிறேன்” (ஆதி. 15:1) என்றும், “நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு. தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்”(1 நாளா. 28:20) என்றும் வேதம் சொல்லுகிறது.

இரண்டாவது, அமர்ந்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். மனிதனின் சுயசித்தம் வேகமாய் வேலை செய்கிறபடியால், அமர்ந்திருப்பது என்பது சற்று கடினமானதாகத்தான் தோன்றுகிறது. ஆனால், நீங்கள் உங்களுக்காகக் கிரியை செய்யும்போது, கர்த்தர்மேல் பாரத்தை வைத்துவிட்டு அமர்ந்திருங்கள்.

மோசே, இஸ்ரவேல் ஜனங்களிடம் சொன்னார். “கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (யாத். 14:14). நீங்கள் கர்த்தரிடத்தில் எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்துவிட்டு, அமைதியாய் ஜெபித்துக்கொண்டிருங்கள். கர்த்தர் நிச்சயம் உங்களுக்காக யுத்தம் செய்வார். ஜெயத்தைத் தந்தருளுவார்.

மூன்றாவது, ‘மனம் துவள வேண்டாம்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். “இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன். அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும். விசுவாசிக்கிறவன் பதறான்” (ஏசா. 28:16). “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால் உன் பெலன் குறுகினது” (நீதி. 24:10) என்று வேதம் சொல்லுகிறது.

தேவபிள்ளைகளே, அதிர்ச்சியான காரியங்களைச் சந்திக்கும்போது  சோர்ந்துபோகாதிருங்கள். கர்த்தரையே முழுமையாய்ச் சார்ந்துகொள்ளுங்கள். தனிமையாய் இருப்பதன் காரணமாய் மனம் துவளும்போது,   கர்த்தருடைய பிள்ளைகளின் ஐக்கியத்திற்கு விரைந்து செல்லுங்கள். அவர்கள்மூலம் கர்த்தர் உங்களுக்கு ஆறுதலையும், தேறுதலையும் தந்து ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- “நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்” (ஏசா. 30:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.