No products in the cart.
மே 02 – மேன்மையாக!
“அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்” (உபா. 28:1).
உபாகமம் 28-ஆம் அதிகாரத்திலே, வாக்குத்தத்தங்கள் மற்றும் சாபங்கள் என இரண்டுமே காணப்படுகின்றன. முதல் 14 வசனங்களும் அருமையான வாக்குத்தத்தங்களாய் உள்ளன. கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது ஒரு மனுஷனுக்குக் கிடைக்கிற மேன்மையான ஆசீர்வாதங்கள் அனைத்தும் அதில் வரிசைப்படுத்திச் சொல்லப்பட்டுள்ளதைக் காணலாம்.
வீடு பிரதிஷ்டை நேரங்களிலும், திருமண வைபவங்களிலும் போதகர்கள் இந்த ஆசீர்வாதங்களைச் சொல்லி விசுவாசிகளை ஆசீர்வதிக்கிறதைக் காணலாம். அந்த மேன்மையான ஆசீர்வாதங்கள் அனைத்தும் ஒரு நிபந்தனையோடுகூட வருவதைக் கவனியுங்கள். உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாய் இருக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அவருடைய சத்தத்துக்கு உண்மையாய் செவிகொடுக்க வேண்டும் என்பது அடுத்த நிபந்தனை.
கர்த்தருடைய இந்த கட்டளைகளும், பிரமாணங்களும் பாரமானவைகள் அல்ல. அவருடைய சுமை எளிதானது. அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுவது என்பது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒன்றாகும். அவர்மேல் அன்புசெலுத்தி, அவரை நேசிக்கும்போது இந்தக் கட்டளைகளை நீங்கள் எளிதாய்க் கைக்கொள்ள முடியும். கர்த்தர் அதைக் கண்டு, உலகத்திலுள்ள சகல ஜாதிகளிலும் உங்களை மேன்மையாக வைப்பார்.
யோசேப்பு, கர்த்தரை நேசித்து பாவத்துக்குத் தன்னை விலக்கிப் பாதுகாத்துக்கொண்டபோது, முழு எகிப்திலும் மேன்மையாக அவரைக் கர்த்தர் உயர்த்தினார். அவருடைய சொந்த சகோதரர்களும், தகப்பனும் அவரைத் தேடிவந்து அவருக்கு முன்பாக வணங்கினார்கள். அவர் தன் குடும்பத்தார் எல்லாரையும் பராமரிக்கக்கூடிய அளவுக்கு உயர்ந்த நிலைமையிலே எகிப்தின் அதிகாரியாய் உயர்த்தப்பட்டிருந்தார்.
தானியேலைப் பாருங்கள். சிறைப்பட்ட ஒரு வாலிபனாகத்தான் அவர் பாபிலோனுக்குச் சென்றார். ஆனால், தானியேலுடைய உள்ளம் கர்த்தரைப் பற்றிய அன்பினால் நிரம்பியிருந்தது. எந்த சூழ்நிலையிலும், கடினமான சட்டங்களின் மத்தியிலும், ஜெபிக்கிறதை அவர் தவறவிட்டுவிடவில்லை. பாபிலோனிலே இராஜாக்கள் வந்தார்கள். இராஜாக்கள் கடந்து போனார்கள். ஆனால், தானியேலோ தொடர்ந்து பிரதம பதவியில் பணியாற்றிக்கொண்டே இருந்தார். அன்றைக்கு இருந்த பாபிலோன் ஞானிகள் எல்லோரைப் பார்க்கிலும் தானியேல் மேன்மையான இடத்தை வகித்தார். வேதாகமத்திலும்கூட அவருடைய தீர்க்கதரிசனங்கள் எத்தனை மேன்மையானவையாய் உள்ளன!
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்து, அவருடைய சத்ததுக்குச் செவி கொடுப்பீர்களேயானால், இன்றைக்கு நீங்கள் இருக்கிற நிலைமையிலிருந்து அவர் உங்களை உயர்த்தி, ஆயிரம் மடங்கு கூடுதலாக ஆசீர்வதிப்பார். நிச்சயமாகவே உங்களை மேன்மையாக வைப்பார்.
நினைவிற்கு:- “இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும், அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்” (உபா. 28:14).