AppamAppam - Tamil

மார்ச் 31 – விழுந்துபோன கோடரி !

“ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான்” (2 இரா. 6:5).

வேதத்திலே எலியா செய்த ஏழு அற்புதங்களும், எலிசா செய்த பதினான்கு அற்புதங்களும் இடம் பெற்றிருக்கின்றன. மேலேயுள்ள வசனத்தில் காணும் சம்பவமானது எலிசா செய்த அற்புதங்களில் ஒன்றாகும். கர்த்தர் ஏன் அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்கிறார்? வேதம் சொல்லுகிறது, “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” (யோவான் 20:31).

எலிசாவின் நாட்களில் தீர்க்கதரிசியின் புத்திரர் தாங்கள் குடியிருக்கும்படி வீட்டைக் கட்ட விரும்பினார்கள். அதிலே ஒருவன் மரத்தை வெட்டும்போது கோடரியானது யோர்தான் நதியின் ஆழமான தண்ணீரிலே விழுந்துவிட்டது. “ஐயோ, என் ஆண்டவனே அது இரவலாய் வாங்கப்பட்டதே” என்று கதறினான்.

இரவலாய் வாங்கப்பட்டிருந்தால் நிச்சயமாய் அது திருப்பிக் கொடுக்கப்படத்தான் வேண்டும். உங்களுடைய சரீரமும்கூட தேவனிடத்திலிருந்து இரவலாய் வாங்கப்பட்டதுதான். ஆகவே அதைப் பரிசுத்தமுள்ளதாய் பாதுகாக்கவேண்டியது உங்களுடைய கடமை. சிலர் தங்களுடைய சரீரத்தைப் பாவங்களுக்குள்ளும், இச்சைகளுக்குள்ளும் விட்டுவிடுகிறார்கள். ஆவி ஆத்துமா சரீரத்தைக் கறைப்படுத்தி விடுகிறார்கள். சரீரத்தைக் குறித்து தேவனுக்கு முன்பாக எப்படி கணக்கு ஒப்புவிப்பது?

வேதம் சொல்லுகிறது, “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1கொரி. 6:19,20).

தேவனுடைய மனுஷனாகிய எலியா மரம் வெட்டின தீர்க்கதரிசியைப் பார்த்து, “அது எங்கே விழுந்தது?” என்று கேட்டான். எங்கே விழுந்தது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு. உங்களுடைய வாழ்க்கையிலே எந்த பகுதியிலே குறை ஏற்பட்டது? எந்த பாவம் உங்களை மேற்கொண்டது? நீங்கள் இப்பொழுது என்ன நிலைமையில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்?

இன்றைக்கு உங்களை ஆராய்ந்து பாருங்கள். தாவீதைப்போல “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங். 139:23,24) என்று ஜெபியுங்கள். தேவபிள்ளைகளே, ஆதி அன்புக்குள் திரும்புங்கள். ஆதி ஜெப ஜீவியத்திற்குத் திரும்புங்கள். கர்த்தர் கிருபையாய் உங்களைத் தூக்கியெடுத்து, நிலை நிறுத்த வல்லவராயிருக்கிறார்.

நினைவிற்கு:- “உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்” (சங். 51:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.