bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
AppamAppam - Tamil

மார்ச் 24 – நோக்கங்களை அறிந்திருக்கிறார்!

“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” (எரே. 1:5).

கர்த்தர் உங்கள் நோக்கங்களையெல்லாம் அறிந்திருக்கிறார். உங்களை எந்தப் பாதையில் நடத்திச் செல்லவேண்டுமென்பதை அறிந்திருக்கிறார். எரேமியா சிறுவனாயிருந்தாலும், அந்த சிறு வயதிலேயே கர்த்தருக்கு அவருடைய வாழ்க்கையின்மேல் ஒரு நோக்கம் இருந்தது. “இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்” (எரே.1:6) என்று எரேமியா சொன்னபோது ‘நான் உன்னை அறிந்தேன்’ என்று கர்த்தர் பதிலளித்தார். எரேமியாவை தாயின் வயிற்றில் உருவாவதற்கு முன்னே அறிந்தவர், உங்களை உலகத்தோற்றத்திற்கு முன்னதாகவே அறிந்திருக்கிறார் என்பதை மறந்துபோய்விடாதேயுங்கள்.

நீங்கள் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். ஆகவே, கோடிக்கணக்கான மக்கள் மத்தியிலேயும் கர்த்தருடைய கண்கள் உங்களைக் கண்டது. உங்களை அவர் அன்போடு தேடி வந்தார். தூக்கியெடுத்து உங்களைத் தன்னுடைய பிள்ளையாய் மாற்றிக் கொண்டார். கல்வாரி இரத்தத்தினாலே உங்களைப் பாவங்களற கழுவினார். நீங்கள் அவருடையவர்கள் என்று உடன்படிக்கையும் செய்தார்.

உங்கள் வாழ்க்கை கர்த்தருடைய கரத்திலிருக்கிறது. பெரிய பிரகாசமான கரத்தில் அவர் உங்களை ஏந்தியிருக்கிறார். ஆணிகளால் கடாவப்பட்ட அந்த வெடிப்பிலே நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள். அவருடைய பெரிய பிரகாசமான கரம் உங்களை வழிநடத்திச் செல்லுகிறது. அவருடைய கரத்தில் இருந்து உங்களை யார் பறித்துக்கொள்ள முடியும்? கர்த்தர் சொல்லுகிறார், “தாயின் வயிற்றில் தோன்றினது முதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர் வயது வரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன். நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன். நான் சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசா. 46:3,4).

என்னுடைய தகப்பனார் சிறுவனாயிருக்கும்போது, அவரது தாயார் அவரிடம், ‘மகனே, நீ என் வயிற்றில் இருக்கும்போதே உன்னை கர்த்தருக்கென்று அர்ப்பணித்தேன். கர்த்தர் உன்னை வல்லமையாய்ப் பயன்படுத்தும்படி ஜெபித்திருக்கிறேன்’ என்று சொன்னார்களாம். அந்த வார்த்தைகள் அவருடைய இருதயத்தைவிட்டு நீங்கவேயில்லை. அவர் வாலிப வயதை அடைந்தபோது, கர்த்தருடைய அன்பு மிகவும் அதிகமாய் அவரண்டை இழுத்துக்கொண்டது. கர்த்தர் அவரை ஆராய்ந்து அறிந்திருந்தார். புத்தக ஊழியத்திலே அவரைக் கொண்டுவருவதற்கு கர்த்தருடைய கிருபை போதுமானதாக இருந்தது. அவரை முன்குறித்த நோக்கம் கொண்டவர், அதை நிறைவேற்ற வல்லமையுடையவராயிருந்தார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய கரத்திலே விசேஷித்த சிருஷ்டியாக இருக்கிறீர்கள். கர்த்தர் உங்கள் வாழ்க்கையைக் குறித்து ஒரு நோக்கம் கொண்டிருக்கிறார். அவர் உங்களை அனாதைகளாயும், திக்கற்றவர்களாயும் விடுவதில்லை. அழைத்த நோக்கத்தை நிச்சயமாகவே நிறைவேற்றுவார்.

நினைவிற்கு:- “நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்கு சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை” (ஆதி. 28:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.