AppamAppam - Tamil

மார்ச் 07 – தேற்றுவார்!

“ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்” (ஏசாயா 66:13).

“தாய் தேற்றுவதைப்போல” என்று தாயின் அன்போடுகூட கர்த்தர் நம்மைத் தேற்றுவது எத்தனை அருமையானது! பிள்ளைகளைக் கண்டிக்க தகப்பன் இருக்கிறான். ஆனால் தேற்றுவதற்கு ஒரு ஆள் தேவை அல்லவா? தாயே அந்த தேற்றும் பணியை ஏற்றுக்கொள்ளுகிறாள்.

சில குடும்பங்களில் தகப்பன் குடித்துவிட்டு வந்து, பிள்ளைகளை அடிஅடி என்று அடிப்பான். சில வீடுகளில் தகப்பன் இடைவிடாமல் வேலை வேலை என்று போய்விடுவான். பிள்ளைகளைக் கவனிக்கவேமாட்டான். சில வீடுகளில் சண்டைகளும் சச்சரவுகளுமாய் இருக்கிறதினால் பிள்ளைகள் மனம்போல வாழுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தாய் ஒருவள்தான் பிள்ளைகள்மேல் கரிசனைகொண்டு அவர்களை ஆற்றித் தேற்றுகிறாள். தேற்றுவதற்கு யாரை உதாரணமாய் கூறுவது என்று எண்ணிய கர்த்தர், தாயைத் தெரிந்துகொண்டார். தாய் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன் என்று அன்போடு சொல்லுகிறார்.

கர்த்தர் உங்களைத் தகப்பன் தன் பிள்ளையைத் தூக்கிச் சுமப்பதுபோல தூக்கிச் சுமக்கிறார். தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்குகிறதுபோல தயவாய் இரங்குகிறார். அதேநேரத்தில் அவர் தாயைப்போல அன்புடையவராகவும் இருக்கிறார். ஆபிரகாமுக்கு கர்த்தர் தன்னை வெளிப்படுத்தும்போது எல்ஷடாய் என்ற பெயரிலே வெளிப்படுத்த சித்தமானார். எல்ஷடாய் என்ற எபிரெய வார்த்தைக்கு தாயைப்போல மார்புடையவர், தாயைப்போல அன்புடையவர், தாயைப்போல நேசித்து போஷிக்கிறவர் என்பவை அர்த்தங்களாகும்.

அநேகமாகப் பிள்ளைகள் தகப்பனோடு நேரம் செலவழிக்கிற தருணங்கள் மிகக் குறைவானதாக இருக்கும். காரணம், தகப்பன் வெளிதேசத்திலிருப்பார். வருடத்திற்கு ஒரு முறையோ, இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோதான் வீட்டுக்கு வருவார். அவருடைய வருகைக்காக பிள்ளைகள் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். வாழ்க்கையின் பெரும்பகுதி பிள்ளைகள் தாயாரோடுதான் இருப்பார்கள். தகப்பனுடைய ஸ்தானத்தையும் சேர்த்து தாயார்தான் தன் பிள்ளைகளைத் தாங்கி நடத்த வேண்டியதிருக்கிறது.

சில பிள்ளைகள் வளர்ந்து, படித்து, திருமணமாகி குழந்தைகளைப் பெற்ற பிறகும் சுகவீனம் என்று வந்துவிட்டால் தாயின் அருகிலேயேதான் இருக்க விரும்புகிறார்கள். இப்போது என் தாய் அருகிலிருந்தால் எவ்வளவு ஆறுதலாயிருக்கும், அவர்களுடைய தேற்றும் வார்த்தைகளைக் கேட்டால் எவ்வளவு சந்தோஷமாயிருக்கும் என்றெல்லாம் எண்ணுகிறார்கள். ஆம், தாயின் அன்புக்கு ஒப்பான இடத்தை வேறு யாருக்கும் கொடுக்கவே முடியாது. ஒருதாய் தன் பிள்ளையை ஒருபோதும் மறப்பதேயில்லை. மாறாத மிகுந்த பாசமுள்ள அன்புதான் தாயின் அன்பு. அது மாறாத அன்பு.

கர்த்தர் சொல்லுகிறார், “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை” (ஏசா. 49:15). தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை ஒருநாளும் மறப்பதில்லை. உங்களை மறவாத கர்த்தரை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடாதேயுங்கள்.

நினைவிற்கு:- “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும் ….. கூறுங்கள்” (ஏசாயா 40:1,2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.