AppamAppam - Tamil

பிப்ரவரி 26 – நற்குணம்!

“ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்” (எபேசியர் 5:9).

நற்குணத்தைச் சுதந்தரித்துக் கொண்டிருப்பவர்களை நல்லவர்கள் என்று அழைக்கிறோம். அந்த நற்குணம் மனுஷனுக்கும், தேவனுக்கும் பிரியமுள்ளதாயிருக்கிறது. அந்த நற்குணம்தான் முதல் பாராட்டையும், மதிப்பையும் பெறுகிறது. ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் தெய்வீக நற்குணத்தால் சிறந்து விளங்கவேண்டும். அப். பவுல் எழுதுகிறார், “என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திச் சொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன்” (ரோமர் 15:14).

நல்ல இருதயம் ஒரு ஊற்றைப் போன்றது. ஊற்றிலிருந்து தெளிவான தண்ணீர் சுரந்து வருவதுபோல், நல்ல இருதயத்திலிருந்து மேன்மையான குணாதிசயங்கள் வெளிப்படுகின்றன. நல்ல இருதயத்திலிருந்து மட்டும்தான் நற்குணங்கள் வரும். எப்படி ஊற்றுத்தண்ணீரானது அநேகருக்கு ஆசீர்வாதமாய் அமைகிறதோ, அதுபோலவே நீங்களும் நற்குணத்தால் நிரம்பியிருக்கும்போது அநேகருக்கு ஆசீர்வாதமானவர்களாயிருப்பீர்கள்.

பர்னபாவைக் குறித்து, அவன் நல்லவன் என்று வேதம் கூறுகிறது (அப். 11:24). அவன் தன்னுடைய ஆஸ்திகளையெல்லாம் விற்று, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்து, அது ஊழியத்திற்கும், ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் பயன்படுவதற்காக முற்றிலும் அர்ப்பணித்தார். மேலும், முன்பு சவுலாயிருந்து பவுலாய் மாறின மனிதனை வாலிபர்கள் முதல் அப்போஸ்தலர்கள் வரை எல்லோரும் ஏற்றுக்கொள்ள தயங்கின வேளையில் நற்குணம் மிகுந்த பர்னபா அவருக்காகப் பரிந்துரைத்து, அவருடைய ஊழிய விருத்திக்காகப் பாடுபட்டு, அவரது மிஷனெரி பயணத்திலே கூடவே சென்று ஊக்குவித்தார். அங்கே தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்தி சொன்னார்.

இன்றைக்கு சில விசுவாசிகள் தாங்கள் நற்குணம் உள்ளவர்கள்போல் நடிக்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதே தன்னுடைய கடமை என்று பொய்யாய் வேஷம் போடுகிறார்கள். ஆனால் உள்ளத்திலே, பட்சிக்கிற ஓநாய்களைப்போல் சுயநலவாதிகளாய் விளங்குகிறார்கள்.

அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து கர்த்தர் துக்கத்தோடு, “உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்து போகிறது” (ஓசியா 6:4) என்று சொன்னார்.

சுயநலம் கருதாத உண்மையான நற்குணம்தான் ஆவியின் கனியாகும். சுயமுயற்சியினால் நீங்கள் நற்குணத்தைப் பெற முடியாது. நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு தேவனோடு நெருங்கி ஜீவிக்கிறீர்களோ, ஆவியானவரோடு தொடர்பு வைத்திருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் வாழ்க்கையிலே நற்குணம் என்கிற கனி மிகுதியாய்க் காணப்படும்.

நினைவிற்கு:- “என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன்” (ரோமர் 15:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.