No products in the cart.
ஜனவரி 12 – புதிய சிருஷ்டி!
“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி. 5:17).
எந்த ஒரு மனுஷன் திடமான தீர்மானத்தோடு கிறிஸ்துவுக்குள் வருகிறானோ, அவன் கர்த்தரால் புதிய சிருஷ்டியாய் மாற்றப்படுகிறான். பழைய வாழ்க்கையை ஒழித்து, எல்லாவற்றையும் கர்த்தர் புதிதாக்கி விடுகிறார். நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, முற்றிலும் பரிசுத்தமான ஒரு குடும்பத்திற்குள் வருகிறீர்கள். அதன் மூலம், பரிசுத்தத்திற்குரிய புதிய பழக்க வழக்கங்கள் உங்களுக்குள் உருவாக வேண்டும். வேத வாசிப்பு, ஜெபம் ஆகியவை உங்களில் காணப்பட வேண்டும். அப்போதுதான் கிறிஸ்தவ ஜீவியத்தில் உங்களால் முன்னேறிச் செல்ல முடியும்.
கிறிஸ்துவுக்குள் வந்தவுடன், முன்பிருந்த பண ஆசை, ஆடம்பரங்கள், கோப எரிச்சல்கள், பாவ பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்தையும் உங்களைவிட்டு நீங்கள் விலக்க வேண்டும். அப்போதுதான், புதிய சிருஷ்டியின் அனுபவத்தோடு உங்களால் முன்னேறிச் செல்ல முடியும். நீங்கள் கிறிஸ்துவுக்குள் வரும்போது உங்களுடைய நடையுடை பாவனைகள் எல்லாமே புதிய நிலைக்கு மாறும். உங்களை அறியாமலேயே ஜெபத்திலும், வேத வாசிப்பிலும் அதிகமான ஆர்வம் ஏற்பட்டுவிடும்.
வேதம் சொல்லுகிறது, “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்” (எபே. 4:23,24). உங்கள் உள்ளான மனுஷனில் புதிய ஆவியுள்ளவர்களாக நீங்கள் மாற வேண்டும். பரிசுத்த ஆவியால் உங்கள் உள்ளம் எப்போதும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
நீங்கள் வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டுமென்றால், முதலாவதாக, உங்களுடைய உள்ளமானது நல்ல எண்ணங்களால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக, நல்ல வேத வசனங்களால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். மூன்றாவதாக, ஜெப ஆவியினால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். நான்காவதாக, பரிசுத்தத்தினாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் புதிய சிருஷ்டிகளாய் கிறிஸ்துவின் சாயலிலே அனுதினமும் மறுரூபமடைய முடியும்.
அநேகருடைய வீடுகளில் வேத புத்தகம் தொடப்படாமலேயே இருந்துவருவதைக் காண்கிறோம். ஏதோ கடமைக்காக ஐந்து அல்லது பத்து நிமிடம் ஜெபித்து விட்டு அதிலேயே திருப்தியடைந்துவிடுகிறார்கள். பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவதற்கு தேவ சமுகத்தில் காத்திருந்து தங்களை ஒப்புக்கொடுப்பதில்லை. இதனால் அவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியம் தள்ளாடுகிறது.
தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வருகை சமீபமாகி விட்டது. உங்களுடைய தீவட்டியானது, எண்ணெயினால் நிரம்பி வழிகிறதாய் இருக்கவேண்டும். கர்த்தர் தன் ஆவியின் அநுக்கிரகத்தை உங்களுடைய ஆவியிலே பொழிந்தருளப் பண்ணுகிறார். தேவனாகிய கர்த்தர் பரிசுத்தராய் இருக்கிறதுபோல நீங்களும் கர்த்தருக்கென்று பூரணமான பரிசுத்தவானாய்க் காணப்படவேண்டும்.
நினைவிற்கு:- “எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்” (கொலோ. 1:28).
