No products in the cart.
ஜனவரி 07 – புதிய கற்பனை!
“நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது” (1 யோவான் 2:8).
புதிய கற்பனை என்று அப். யோவான் எழுதுகிறார். அந்தப் புதிய கற்பனையின்படியே நீங்கள் நடந்து வரும்போது எல்லாம் புதிதாகிறது. இருள் நீங்கி மெய்யான ஒளி பிரகாசிக்கிறது. ஆம், அந்தப் புதிய கற்பனைகள் உங்களைப் புதிய வெளிச்சத்திற்குள் வழிநடத்துகின்றன.
பழைய கற்பனை மோசேயின் மூலமாக இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்கள் வணங்கா கழுத்துள்ளவர்களும், அடங்காதவர்களும், முறுமுறுக்கிறவர்களுமாய் வாழ்ந்து வந்தார்கள். ஒரு கட்டுப்பாடும் இல்லாமல், அடிமைகளாய் வாழ்ந்த அவர்களை ஆண்டவர் சட்டதிட்டத்திற்குள் கொண்டு வந்தார். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று மனம்போன போக்கில் வாழ்ந்துகொண்டிருந்த அவர்களை இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்லி, பத்துக் கட்டளைகளின்படி வாழ வழி வகுத்துக் கொடுத்தார். அந்த நியாயப்பிரமாணம் அவர்களை ஆளுகை செய்தது. அதிலுள்ள பெரும்பாலான பிரமாணங்களை இஸ்ரவேலரால் கடைப்பிடிக்க முடியவில்லை. இதனால் அவர்களை சாபங்கள் தொடர ஆரம்பித்தன.
ஆனால் புதிய ஏற்பாட்டுக்குள் வரும்போது, அன்பின் பிரமாணங்களை கிறிஸ்து நமக்குக் கொடுத்தார். பத்துக் கட்டளைகளுக்குப் பதிலாக இரண்டே கட்டளைகளை அவர் நமக்குமுன் வைத்திருக்கிறார். ‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அன்புகூரவேண்டும்’ என்பதை முதல் கட்டளையாகவும், ‘நாம் நம்மில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூரவேண்டும்’ என்பதை இரண்டாம் கட்டளையாகவும் வைத்தார். இதுதான் புதிய போதனை; புதிய கட்டளை.
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ஜீவனுக்கு ஜீவன், பழிக்கு பழி என்பதே பழைய ஏற்பாட்டின் பிரமாணமாய்இருந்தது. ஆனால் ‘சத்துருக்களையும் சிநேகியுங்கள், பகைவர்களுக்கும் அன்பு செய்யுங்கள்’ என்பதே கர்த்தரின் கட்டளையாயிற்று. உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும் என்று கர்த்தர் கூறுகிறார்.
நீங்கள் கிறிஸ்துவுக்குள் வரும்போது நியாயப்பிரமாணத்தின் ஆளுகைக்குள்ளாக வராமல் அன்பின் பிரமாணத்திற்குள் வருகிறீர்கள். அன்பு செலுத்துவதே உங்களுடைய பிரதான கடமையாகும். கிறிஸ்து உங்களிடத்தில் எவ்வளவாய் அன்பு கூர்ந்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த அன்பை நீங்கள் பிரதிபலிக்க வேண்டும்.
தேவபிள்ளைகளே, நீங்கள் புது உடன்படிக்கையின் நாட்களுக்குள் இருக்கிறீர்கள். கிறிஸ்து உங்களோடுகூட உடன்படிக்கை செய்திருக்கிறார். அந்தப் புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரான இயேசுகிறிஸ்துவை நன்றியோடு ஸ்தோத்திரிப்பீர்களா?
நினைவிற்கு:- “இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது” (எபி. 8:8).
