No products in the cart.
ஜனவரி 03 – புதிய பாதை!
“நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினார்” (எபி. 10:19).
கர்த்தர் உங்களுக்குப் புதிதும் ஜீவனுமான ஒரு மார்க்கத்தை வைத்திருக்கிறார். அந்த மார்க்கத்தின் வழியாய் மகாபரிசுத்த ஸ்தலத்திற்குள் உட்பிரவேசிக்கும்போது, நீங்கள் தேவ மகிமையை கண்ணாரக்கண்டு மகிமையின் மேல் மகிமையடைவீர்கள்.
இந்தப் புதிய மார்க்கத்தை கர்த்தர் தருவதற்காக தம்முடைய மாம்சமாகிய திரையைக் கிழித்தார். இயேசுவினுடைய மாம்சமாகிய திரை கிழிந்த அதே நேரத்தில் எருசலேம் தேவாலயத்திலிருந்த திரைச்சீலையும் மேலிருந்து கீழாகக் கிழிந்தது. இதனால் பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையிலிருந்த தடுப்புச் சுவர் நீங்கிவிட்டது. மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து தேவனுடைய மகிமையை நீங்கள் பெற்றுக் கொள்ளும்படியான புதிய மார்க்கத்தைக் கர்த்தர் திறந்து வைத்தார். அந்த மார்க்கத்தின் வழியாக புதிய சந்தோஷத்தோடு கிருபாசனத்தண்டை நீங்கள் கிட்டிச் சேருகிறீர்கள். அவருடைய மகிமையின் பிரசன்னத்தை அளவில்லாமல் ருசித்து மகிழுகிறீர்கள்.
சாது சுந்தர்சிங்கிடம் அவருடைய நெருங்கிய உறவினரான ஒரு சீக்கியர் வந்து தர்க்கம் செய்து, “நம்முடைய மார்க்கத்தில் இல்லாத எந்தப் புதிய, சிறப்பான கொள்கைகளை கிறிஸ்தவத்தில் நீர் கண்டீர்? அதை எனக்கு கூறுவீரானால் அதற்கு இணையான கொள்கை நமது மார்க்கத்திலும் இருப்பதை நான் உமக்குக் காண்பிக்கிறேன்” என்று சொன்னார்.
அதற்கு சாது சுந்தர்சிங் மிகுந்த சாந்தமாக, “இயேசுகிறிஸ்துவின் ஈடு இணையற்ற அன்பும் தியாகமும் வேறு எந்த மார்க்கத்திலும் இல்லை. அவருடைய சரீரமாகிய மாம்சத் திரை கிழிக்கப்பட்டு, எனக்காக ஒரு மகிமையான மார்க்கத்தை, புதிய மார்க்கத்தை அவர் திறந்து வைத்திருக்கிறார். உங்கள் மார்க்கத்தில் அப்படி உண்டா?” என்று கேட்டபோது அந்த சீக்கியரால் பதில் சொல்ல முடியவில்லை.
அப். பவுல் சவுலாக வாழ்ந்து வந்தபோது தன்னுடைய மார்க்கத்தின் மேல் பக்தி வைராக்கியமுடையவராய் இருந்தார். அந்த பழைய மார்க்க வைராக்கியத்தின்படியே கிறிஸ்தவர்களை நிர்மூலமாக்கி, சபைகளைப் பாழாக்குவதே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்று எண்ணியிருந்தார்.
ஆனால் தமஸ்கு வீதியிலே, திடீரென்று தேவனுடைய மகிமையின் வெளிச்சம் அவர்மேல் வீசியது. அவர் கீழே விழுந்து, “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டார். கிறிஸ்துவுடனான சந்திப்பு அவருடைய வாழ்க்கையை முழுவதுமாய்மாற்றிற்று. அவர் புது சிருஷ்டியானார். எந்த கரங்கள் சபைகளை பாழாக்கும்படி பிரதான ஆசாரியரிடம் நிருபங்களை வாங்கிக் கொண்டு போனதோ, அதே கரங்கள் சபைகளை வளரச் செய்யும் கரங்களாய்மாறின. அவற்றைக்கொண்டு புதிய நிருபங்களை எழுத தேவன் வல்லமையுள்ளவராயிருந்தார்.
தேவபிள்ளைகளே, கிறிஸ்து தமது சரீரமாகியத் திரை கிழிக்கப்படுவதின் மூலமாக ஏற்படுத்திய புதிய மார்க்கத்தில் நீங்களும் உற்சாகமாய் நடந்து செல்லுங்கள்.
நினைவிற்கு :- “சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்” (அப். 9:17).