No products in the cart.
டிசம்பர் 31 – கர்த்தர் அற்புதங்களைச் செய்வார்!
“உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்” (யோசுவா 3:5).
வருடத்தின் இறுதி நாட்கள் உங்களை நீங்களே ஆராய்ந்து பார்த்து வாழ்க்கையைச் செப்பனிட வேண்டிய நாட்கள். மாத்திரமல்ல, புதிய வருடத்திற்காக உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளுகிற நாட்கள். கர்த்தருடைய கைகளிலே உங்களைக் சமர்ப்பிக்கிற நாட்கள்.
வருகிற புதிய ஆண்டில் கர்த்தர் உங்களை விசேஷித்த விதமாய் ஆசீர்வதிக்க விரும்புகிறார். உங்களுக்கு முன்பாகச் செல்ல விரும்புகிறார். ஒவ்வொருநாளும் உங்களுடைய வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்த விரும்புகிறார். அதை நீங்கள் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவர்களாய் மாறும்படி, இந்த நாட்களிலே உங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ளுவீர்களாக.
யோசுவா சொல்லுகிறதை மறுபடியும் தியானித்துப் பாருங்கள். “உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்” (யோசுவா 3:5). என்ன அற்புதங்களை நிகழ்த்துவார்? என்ன அதிசயங்கள் அவர்களுக்கு தேவையாயிருந்தன? ஆம், அவர்கள் கானானுக்குள் பிரவேசிக்க வேண்டுமென்றால் யோர்தானைக் கடக்க வேண்டியதிருந்தது. யோர்தான் பிரவாகித்து வருகிற பெரிய நதி ஆகும். அறுப்புக்காலம் மட்டும் யோர்தானில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். யுத்த வீரர்களையே அடித்துச்செல்லக் கூடிய, காட்டு வெள்ளம் வரக்கூடிய அந்த யோர்தானை ஸ்திரீகளும், பிள்ளைகளும் எப்படிக் கடந்துசெல்ல முடியும்?
இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டதினாலே கர்த்தர் அற்புதங்களைச் செய்ய ஆயத்தமாயிருந்தார். இஸ்ரவேலிலே உள்ள ஆசாரியர்கள் தங்களுடைய கால்களை யோர்தானில் வைத்தபோது, மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஒரு பெரிய குவியலாக நிற்க ஆரம்பித்தது. அத்தனை பெரிய யோர்தானில் வழி ஏற்பட்டது. அந்த வழி வெட்டாந்தரையாயிற்று.
தாவீது அதைப் பார்த்தபோது யோர்தானிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்ற எண்ணம் அவர் உள்ளத்தில் வந்தது. “கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்… உங்களுக்கு என்ன வந்தது” (சங். 114:5, 6) என்று கேட்கிறார். அதற்கு அந்த யோர்தானின் பதில் என்னவாக இருந்திருக்கும்? ‘என்னைக் கவனிக்கிறவரும், என்னை அடக்கி ஆளுகிறவருமான கர்த்தர் மேல் விசுவாசத்தோடு வரும் தேவ ஜனங்களுக்கு வழிகொடுக்காமல் என்னால் எப்படி இருக்க முடியும்? தேவஜனங்கள் கானானைச் சுதந்தரித்துக் கொள்ள வேண்டும். அதுதான் என் ஆவல்’ என்று சொல்லியிருந்திருக்கக்கூடும்.
தேவபிள்ளைகளே, நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ளுவீர்களென்றால், உங்கள் வாழ்க்கையெல்லாம் அற்புதங்களைச் செய்ய கர்த்தர் காத்திருக்கிறார். இன்றைக்கே உங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். புத்தாண்டில் அற்புதங்களை அடுக்கடுக்காய்க் காண்பீர்கள்.
நினைவிற்கு:- “ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது” (சங். 136:4).