No products in the cart.
டிசம்பர் 28 – கர்த்தர் மேல் பயபக்தி!
“நோவா… தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்” (எபி. 11:7).
தேவ பயமானது பக்தியை நோவாவின் வாழ்க்கையில் கொண்டு வந்தது. ஆகவே அவர் பயபக்தியுள்ளவரானார். தேவனுடைய எச்சரிப்புக்குச் செவிகொடுத்து, தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் பாதுகாப்பதற்காக கர்த்தர் சொன்னபடியே ஒரு பேழையை உண்டு பண்ணினார்.
பயம் இரண்டு விதத்திலே கிரியை செய்யக்கூடியது. ஆக்கபூர்வமான பயமும் உண்டு; அழிவுக்கு நேராக வழிநடத்தும் பயமும் உண்டு. சில பயங்கள் நம்மை எச்சரித்து நல்வழிக்குள் கொண்டுவருகின்றன. சில பயங்கள் காரணமில்லாமல் நம் இருதயத்தை வாட்டி நோய்களுக்குள்ளும், வியாதிகளுக்குள்ளும், முடிவில் மரணத்திற்குள்ளும் கொண்டு செல்லுகின்றன.
உதாரணமாக, பரீட்சையைக் குறித்து பயப்படுகிற மாணவன் அதற்காகக் கண்விழித்து படிக்கிறான். பெற்றோருக்குப் பயந்து நடக்கிற குழந்தைகள் தீமையான வழியில் செல்லாமல் தங்களைக் காத்துக்கொள்ளுகிறார்கள். அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள் நோய்க் கிருமிகள் தொற்றிவிடுமோ என்று பயந்து, தங்களுடைய எல்லா கருவிகளையும் சுத்திகரித்து முன் ஏற்பாட்டுடன் தங்கள் தொழிலைச் செய்கிறார்கள்.
அதுபோலவே எந்த ஒரு மனுஷன் தேவனுக்குப் பயந்து நடக்கிறானோ அவன் தன்னைத் தீமையினின்றும், பாவத்தினின்றும் பாதுகாத்துக் கொள்ளுகிறான். ஒரு முறை ஒரு சகோதரி, “ஐயா, நான் எப்படியாவது மோட்சத்திற்கு போகவேண்டும் என்ற வாஞ்சையினாலும், நரகத்தின் மேல் எனக்கு உள்ள பயத்தினாலும், கர்த்தரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு பரிசுத்த ஜீவியம் செய்து வருகிறேன்” என்றார்.
அதுபோல, நோவாகூட ஒரு எச்சரிப்பைப் பெற்றார். உலகம் ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்படப்போகிறது என்பதே அந்த எச்சரிப்பு. அதற்கு அவர் தப்பும்படி எவ்வளவு ஜாக்கிரதையாய், எவ்வளவு பாடுபட்டு, தனக்கும் தன் குடும்பத்திற்கும் பேழையை கட்டினார்! அந்த பயம் அவரை பாதுகாத்ததல்லவா?
இன்னொரு பயமும் உண்டு. அது கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்காமல் பிசாசுகளுக்கும், மந்திரவாதிகளுக்கும் பயப்படுவது. இருளுக்கும், பூச்சிகளுக்கும், பல்லிகளுக்கும், செய்வினைகளுக்கும் பயப்படுவது. என்னத்தை உடுப்போம் என்றும், குடிப்போம் என்றும் பயப்படுவது. இந்த பயம் மனுஷனுடைய இருதயத்தை வாட்டுகிறது. உங்கள் பயங்களையும், கவலைகளையும் கர்த்தர் மேல் வைத்துவிட்டு, அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டு, தூய்மையான வாழ்க்கை வாழும்போது இத்தகைய பயங்கள் உங்களை மேற்கொள்ளுவதே இல்லை.
தேவபிள்ளைகளே, எந்த சூழ்நிலைக்கும், பிரச்சனைக்கும் பயப்படாமல், கர்த்தர் ஒருவருக்கே பயந்து வாழுங்கள். அவர் ஒருவருக்கே பயந்து பயபக்தியாய் நடந்து கொள்ளுங்கள். ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறார்: “நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்” (ஏசா. 12:2).
நினைவிற்கு:- “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” (1 யோவான் 4:18).