No products in the cart.
டிசம்பர் 25 – கிறிஸ்மஸ் இரகசியம்!
“அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்” (1தீமோ. 3:16).
எனக்கு மிகவும் அருமையான அன்றன்றுள்ள அப்பம் குடும்பத்தாராகிய உங்களை மிகவும் அன்போடு ஆசீர்வதிக்கிறேன். கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியோடும், அன்போடும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதிலும் உள்ள கர்த்தருடைய பிள்ளைகள், இயேசுவின் பிறப்பை நினைத்து களிகூருகிற இந்த நாட்களிலே, தேவ பிரசன்னமும் மகிமையும் உங்கள் உள்ளத்தையும், குடும்பத்தையும் நிரப்புவதாக.
கிறிஸ்மஸ் நாளின் இரகசியம் என்ன? அதன் மேன்மை என்ன? தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதே அந்த ரகசியம். மேன்மைக்கு மட்டுமல்ல, மகிழ்ச்சிக்கும் அதுவே ஆதாரம். வேதம் சொல்லுகிறது, “தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார்” (1 தீமோ. 3:16).
தேவன் காணக்கூடாதவர். சேரக்கூடாத ஒளியிலே வாசம்பண்ணுகிறவர். அவர் காணக்கூடியவராக கிட்டிச் சேரக்கூடியவராக பூமிக்கு இறங்கி வந்தார். அந்த அருமையான தேவன் பாலகனாய்த் தோன்றி, உங்கள் மத்தியிலே வாசம் பண்ணச் சித்தமானது உங்களுக்குக் கிடைத்த பாக்கியமல்லவா! கிறிஸ்மஸின் நோக்கமே அவருடைய பெயரில் வெளியாகிறது.
இயேசு என்றால், “அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்று அர்த்தம். கிறிஸ்து என்றால், “அபிஷேகிக்கப்பட்டவர்” என்று அர்த்தம். இம்மானுவேல் என்றால், “தேவன் நம்மோடிருக்கிறார்” என்று அர்த்தம். மட்டுமல்ல, ஏசாயா தீர்க்கதரிசி, நாம் புரிந்துகொள்ளக்கூடிய அர்த்தமுள்ள ஐந்து நாமங்களை அவருக்குச் சூட்டி மகிழ்ந்தார். “அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியபிதா, சமாதானப்பிரபு என்னப்படும்” (ஏசா. 9:6).
பரலோகத்தின் தேவன் வாக்குத்தத்தமான நாமங்களோடு பூமியிலே இறங்கி வந்ததுடன் நமக்குள்ளே வாசம் பண்ணவும் சித்தமானார். யோவான் எழுதுகிறார், “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவான் 1:14).
தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டதற்கு இன்னொரு ரகசியமுமுண்டு. பரலோகத்திலிருக்கிற பிதாவை வெளிப்படுத்துவதே அந்த ரகசியம். இயேசு சொன்னார் “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவான் 14:9). இயேசு இந்த பூமியில் அவதரித்ததின் மூலம் காணக்கூடாத இறைவனைக் காண்கிறீர்கள். தேவபிள்ளைகளே, இதுவே இந்த நன்நாளின் மகிழ்ச்சியாயிருக்கட்டும்.
நினைவிற்கு:- “அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது” (லூக். 1:78, 79).